தமிழரசு கட்சியின் நிர்வாக தெரிவுகள் யாப்புக்கு முரணானது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு, யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என்பதனை சுட்டிக்காட்டி யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கான வலுவான காரணங்களையும் நிர்வாக தெரிவுக் கூட்டத்தில் இடம்பெற்ற முறைகேடான சம்பவங்களையும் சுட்டிக்காட்டி கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் முக்கிய விடயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

காங்கேசன் துறைத் தொகுதிக்கான நிர்வாக தெரிவு மாவட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கும் ஏற்கனவே இயங்கு நிலையில் இருக்கும் தொகுதி நிர்வாகத்திற்கும் தெரியாமல் கட்சியின் பதில் தலைவர் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினரை அழைத்து புதிய நிர்வாக தெரிவு நடைபெற்றமை யாப்பு விதிமுறைகளுக்கு முரணானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தொகுதிகிளை நிர்வாகிகள் கட்சியில் முறையிட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்கு வட்டுக்கோட்டைத் தொகுதியில் இடம்பெற்ற வெற்றிடம் நிரப்புதல் எனும் பெயரில் புதிதாக நிர்வாக தெரிவுக்கு மாவட்ட தலைவர் செயலாளருக்கு அறியப்படுத்தாமல் கட்சியின் பதில் தலைவர் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்களை இணைத்து தொகுதி நிர்வாக தெரிவு இடம்பெற்றது யாப்பு விதிகளுக்கு முரணானது என்றும் கந்தசாமி பிருந்தாபன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் யாழ். மாவட்ட கிளை உத்தியோகத்தர் தெரிவுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இன்றி கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தலைமை தாங்கி நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐனநாயக கட்சியில் அங்கத்தவர்களின் கருத்துக்களை கேளாது அராஜகமான முறையில் கூட்டங்களை தலைமை தாங்கி பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நடாத்தியதாகவும் அவர் விமர்சித்தார்.

தலைமை பீடத்தில் இருந்து தெரிவு செய்தால் மறு தெரிவு இருக்க கூடாது என மிரட்டி கூட்டத்தை தலைமை தாங்கிய பதில் பொது செயலாளரால் எச்சரிக்கையாக கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் தெரிவித்துள்ளார்.