கண்டியில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிக்கு ஒருவர் கைது

கண்டியில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பௌத்த பிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியினது தந்தையின் சகோதரர் என்று காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பிக்கு 25 வயதுடையவர் எனவும் பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றியவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தக் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்ணைத் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபரான பிக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அநுராதபுரத்தில் சிறுமி ஒருவரை முக்கிய பொறுப்பில் இருந்த பௌத்த தேரர் ஒருவர் பாலியல் ரீதியான வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.