மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது என்று அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு நிராகரித்துள்ளதுடன், நிலுவையிலுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
“மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டில் நடத்த முடியாது” என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் அல்லது பல்வேறு தனிநபர்கள் வெளியிடும் கருத்துக்களைத் தேர்தல் ஆணைக்குழு ஒருபோதும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை என்று அதன் தலைவர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
“தேர்தல் நடத்துவது குறித்து அரசியல்வாதிகள் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது. வெவ்வேறு நபர்கள் கூறும் அறிக்கைகள் எங்களுக்கு முக்கியமல்ல.
தற்போதைய சட்ட ரீதியான நிலைமைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையிலேயே நாங்கள் செயற்படுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான சட்டப் பின்னணிகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றத்தினால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல்களை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் நடத்தப்படும் வேளையில் அதற்கான நிதியைத் திறைசேரி விடுவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



