மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என சகல எதிர்கட்சிகளும் இப்போது குரல் கொடுப்பதை காணலாம் அதில் வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு மாகாணசபை தேர்தலை இலக்குவைத்து ஆளும் தரப்பான தேசிய மக்கள் சக்தி தொடக்கம் வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய கட்சிகள், மற்றும் ஏனைய முஷ்லிம், தமிழ் கட்சிகள் அனைத்தும் அதில் கண்வைத்து தமது அரசியல் வேலைகளை செய்வதையும் ஒற்றுமை கதைகளை கதைப் பதையும் காணமுடிகிறது.
இணைந்த வடகிழக்கில் இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987, யூலை,29, ல் கைச்சாத்திட்ட பின்னர் முதலா வது தேர்தல் 1988 நவம்பர் 19,ல் இணைந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றது. 1988 டிசம்பர் 10 இல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் அ. வரதராஜப் பெருமாள் வடகிழக்கு மாகாணசபையின் முதலா வது முதலமைச்சரானார்.
1990 மார்ச்சு 01 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் திருகோணமலை மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப்பிரகடனப்படுத்தி விட்டு அமைதிப் படையின ருடன் சேர்ந்து இந்தியா சென்றார்.
2006,யூலை,14,ல், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி, தற் போதைய ஜனாதிபதி அநுராவின் தேசியமக்கள் சக்தி வட, கிழக்கு மாகாணங்களைப் பிரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.2006 அக்டோபர் 16 ல் வடகிழக்கு இணைப்பு செல்லுபடியாகாதென உச்சநீதிமன்றம் தீர்ப் பளித்தது.
2008,மே,10, ல் முதலாவது கிழக்குமாகாணசபை தேர்தல் இடம்பெற்றது அந்த காலம் வடகிழக்கில் இருந்து தெரிவான தமிழ்தேசிய கூட்டமைப்பு 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாத கொலை அச்சுறுத்தல் மகிந்தரஷபக்ஷ அரசில் இருந்தது. அதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆளும் கட்சியாக இருந்த ஜனாதிபதி மகிந்தராஷ பக்ஷவின் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிட்டு பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சரானார்.
2012, செப்டம்பர்,08, ல் இரண்டாவது கிழக்கு மாகாணசபை தேர்தலில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பும் போட்டியிட்டது. 2012 தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு, மக்கள் விடுதலை முன்னணிஉட்பட 13 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சைக் குழுக்களும், அம்பாறை மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 18 சுயேட்சைக் குழுக்களும், திருகோணமல மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. கிழக்கு மாகாண சபையின் மொத்த வேட்பாளர்கள் 1470. போட்டியிட்டு 37, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, (ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷ் இணைந்து) 200, 044 வாக்குகளை பெற்று 14, ஆசனங்களையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 193,827, வாக்குகளைப்பெற்று 11, ஆசனங்களை யும் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங கிரஷ் 07, ஆசனங்களையும், ஐக்கியதேசிய கட்சி 74,901, வாக்குகளை பெற்று 04, ஆசனங் களையும், விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி 9,522 , வாக்குகளை பெற்று 01ஆசனத்தை யும் பெற்று மொத்தமாக 37, உறுப்பினர்கள் தெரிவானார்கள்.
இனரீதியாக கிழக்கு மாகாண சபைக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 08 சிங்களவர்கள் தெரிவானார்கள்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் தெரிவான மு. நஜீப் அப்துல் மஜீத் 2012 செப்டம்பர் 18,ல் பதவி ஏற்றார்.
2015, ஜனவரி,08, ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்த லில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மைத்திரி பால ஶ்ரீசேனாவை பகிரங்கமாக ஆதரித்தனர் அவர் வெற்றிபெற்றபின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு அவருடன் இணைந்து பணி யாற்றுவதற்கு ஒப்புக்கொண்டனர் அதற்கான காரணம் புதிய அரசியல் யாப்பு மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வை காண்பதற்காக என்ற சிந்தனை தமிழ்தேசிய கூட்டமைப்பு க்கு இருந்தது.
கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த கிண் ணியாவை சேர்ந்த நஜீப் அப்துல் மஜீத் தானாகவே 2015, பெப்ரவரி மாதம் 05, ம் திகதி பதவி விலகிய நிலையில் 2015, பெப்ரவரி,06,ல் முதலமைச்சராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஷ் கட்சியை சேர்ந்த ஏறாவூர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரியுடனான இணக்கப்பாட்டால் கிழக்கு மாகாணசபையில் ஆளும் தரப்பாக கூட்டு அரசாக தமிழ்தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயல்பட முடிவு எடுத்தது. இதன் காரணமாக கிழக்கு மாகாணசபையிலும் ஆளும் தரப்பு ஆட்சியில் பங்காளி களாக 2015,மார்ச்,04, ல் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு விவசாய அமைச்சராக கி.துரைராசசிங்கமும், கல்வி அமைச்சராக தண்டாயுதபாணியும், சபை பிரதி தலைவராக பிரசன்னா இந்திரகுமாருக்கும் பதவி வழங்கியபோதும் முதலமைச்சர் பதவி தொடர்ந்தும் ஏற்கனவே பதவியில் இருந்த நசீர் அஹமட்க்கு விட்டுக்கொடுத்தனர்.
இதனால் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்ததாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது பல விமர்சனங்கள் இன்றுவரை தொடர்வதை காண லாம். கிழக்குமாகாணசபையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏனைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ், ஐக்கிய தேசிய கட்சி, ஆகியவை இணைந்து கூட்டாக கிழக்கு மாகாணசபை ஆட்சி இயங்கியது.
இந்த நிலையில் 2015, ஆகஷ்ட்,17, ல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு 16, ஆசனங்களுடன் எதிர்கட்சியாக செயல்பட்டாலும் ஆட்சியமைத்த ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணிலுடன் நல்லாட்சி எனும் பெயருடன் ஆட்சியில் பங்காளர்களாக மாறினர். அரசியல் தீர்வுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு கெஞ்சிக்கூத்தாடியும் ஜனாதிபதி மைத்திரியும்,பிரதமர் ரணிலும் அவர்களை ஏமாற்றிவிட்டனர் என்பது வரலாறு.
தற்போது மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துமாறு எதிர்கட்சிகள், இந்திய அரசு அழுத்தம் கொடுக் கும் நிலையில் இந்த ஆண்டு 2026, இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு 2027, ல் மீண்டும் கிழக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெற்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கட்சிகள் பிரிந்து தனித்தனியாக தேர்தலுக்கு முகம் கொடுத்தால் தமிழர்கள் வாக்குகள் சிதறும் நிலையில் தமிழர்களின் பிரதிநித்துவம் குறையவே வாய்ப்புள்ளது.
பிரதான தாய்க்கட்சியாக கருதப்படும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கடந்த 2024, ஜனவரி,21, தொடக்கம் இரண்டு அணியாக செயல்படுவதும், நீதிமன்றில் வழக்கில் கட்சி உள்ளதும் தமிழர்கள் மத்தியில் அதிருப்தி்நிலை உள்ளது.
தேசிய மக்கள் சக்தியை வடகிழக்கில் தொடவிட மாட்டோம் என கடந்த 2026, மே,01 ல் மாங்குளத்தில் தமிழரசு கட்சி மேதினத்தில் அதன் பதில் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் உரையாற்றிவிட்டு சரியாக 19, தினத்தால் அதுவும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 17, ம் ஆண்டு நினைவு 2026, மே,18, ல் நடந்து இரு தினங்களில் மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழாவில் அழைப்பு அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி அநுராவுடன் அழைப்பு இன்றி கலந்துகொண்ட அதே எம் ஏ சுமந்திரன் அவரை தொட்டு உறவாடி சிரித்துப்பேசிய காட்சிகளை காணமுடிந்தது.
ஊருக்கு உபதேசம் உனக்கில்லை என்ற நிலையில் தமிழரசுக்கட்சியின் செயல் மாறியுள்ளது இதனாலும் மட்டக் களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு இருந்த ஆதரவு குறைந்துள்ளது.
இறுதியாக 2012, கிழக்கு மாகாணசபை தேர்தலில் இனரீதியாக கிழக்கு 15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 8 சிங்கள வர்கள் தெரிவானார்கியது போல் சிலவேளை முஸ்லிம் உறுப்பினர்கள் 17, ஆகவும், சிங்கள உறுப்பினர்கள் 10, ஆகவும் உயர்ந்து தமிழ் உறுப்பினர்கள் 10, ஆகவும் குறையவும் வாய்ப்புள்ளது.
தமிழர்கள் 10, ஆசனங்களில் தற்போதைய ஆளும் தரப்பான தேசிய மக்கள் சக்திக்கும் தமிழர் பிரதிநித்துவம் 03, அல்லது 04, சிதறுவதற்கும் வாய்புள்ளதை அவதானிக்க முடிகிறது.
தமிழர் பிரதிநித்துவத்தை தக்கவைக்க அல்லது கூட்ட வேண்டுமானால் தமிழ்தேசிய கட்சிகளாக கடந்த 2009, மே,18, க்கு பின்னர் சிதறி தற்போது 13, கட்சிகளாக உள்ளவர்கள் ஒரு குடையில் ஒரு சின்னத்தில் கிழக்கு மாகாணசபை தேர்தலை சந்தித்தால் மட்டுமே தமிழர்க ளின் பிரதிநித்துவத்தை அதிகரிக்கமுடியும் என்ற உண்மையை தமிழ்தேசிய கட்சிகளை வழி நடத்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.
அதே வேளை தேர்தலுக்கு முன்னர் வேறு எந்த முஷ்லிம் கட்சிகளுடனும் இரகசியமாகவோ, வெளிப் படையாகவோ தமிழ்தேசிய கட்சிகள் யாராவது ஒப்பந்தம் செய்தால் அதுவும் தமிழர்களின் வாக்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற உண்மையை அப்படியான கட்சிகள் உணரவேண்டும்.
தேர்தல் முடிந்ததன் பின்னரே யாருடன் கூட்டுச் சேர்வது எப்படி பதவிகளை பங்கீடு செய்வது என்பவற்றை தீர்மானிக்கவேண்டுமே தவிர கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னம் இவ்வாறான கதைகளை தவிர்பதே ஆரோக்கியமானதாகும்.



