ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன.
அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவும், இந்த மீளாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, அதன் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக மாகாணசபைத் தேர்தல் முறைமையில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு கிராம மட்டத்தில் கருத்து கணிப்புக்களை முன்னெடுக்க வேண்டுமென்று தேர்தல் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்வைத்த யோசனைக்கு குழுவின் ஏனைய உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.



