தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், முக்கால் நூற் றாண்டு காலப் பாரம்பரியமும், அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட நிறுவனமயப்பட்ட ஆளுமையும் கொண்ட பேரி யக்கமாக விளங்குவது இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும்.
தந்தை செல்வாவின் வழிவந்த, தத்துவங்களாலும் அர்ப்பணிப்புகளாலும் கட்டியெழுப்பப்பட்ட இந்தக் கட்சி, தற்போது தனது வரலாற்றின் மிக மோசமானதொரு உட்கட்சிப் பூசலையும் தடம் புரளலையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த வாரம் தமிழர் தேசம் முழுவதும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் மூழ்கியிருக்க தமிழரசுக் கட்சி அதன் வவுனியா அலுவலகமான தயாகத்தில் நடத்திய மத்திய குழுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவங்களும் கட்சியின் எதிர்காலம் குறித்த பலத்த கேள்விகளையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளன.
குறிப்பாக, பதில் பொதுச்செயலாளராகப் பொறுப் பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனின் மாறுபட்ட செயற்பாடுகள் மற்றும் நிலைப்பாடுகள், கட்சியின் பாரம்பரிய அரசியல் பாதையைச் சிதைத்து, அதனை நலிவடைந்த நிலைக்குக் கொண்டு செல்கின்றமையை பகிரங்கமாகவே உணர முடிகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழ் மக்களின் வரலாற்றில் மிகக் கொடூர ரணங்களை வடுக் களாக சுமந்து வரும் நிலைக்கு காரணமாகிய, உணர்வு பூர்வமான காலப்பகுதியாகும். இம்முறை தமிழரசுக் கட்சி பல இடங்களில் கஞ்சி வழங்கும் செயற்பாடுகளையும் நினைவேந்தல்களையும் முன்னெடுத்திருந்த போதிலும், முள்ளிவாய்க்கால் நாளுக்கு முதல் நாளான மே 17ஆம் திகதி தனது உள்ளக முரண் பாடுகளை ஆராய்வதற்காக மத்திய குழுக் கூட்டத்தைக் கூட்டியது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதவொரு செயலாகும்.
இந்தக் கூட்டம் ஒட்டுமொத்த தமிழ் தேசியப் பரப்பிலும் விசித்திரமான, அதேவேளை கவலையளிக்கும் நகர்வாகவே பார்க்கப்பட்டது. இக்கூட்டம் எவ்வித அவசரத் தேவையுமின்றி, 7 மாதங்களுக்குப் பின்னர் திட்டமிட்ட அடிப் படையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை இலக்கு வைத்து, அவரை ஓரம் கட்டுவதற்காக அல்லது கட்சியை விட்டு வெளியேற்றுவதற்காகவே கூட்டப்பட்டது என்பது வெளிப்படையானது.
தமிழ் மக்களின் ஆகப்பெரும் சோகத்தை நினைவு கூரும் வாரத்தில், தங்களது சுயநல அரசியல் அதிகாரப் போட்டியை அரங்கேற்றியமை, தமிழரசுக் கட்சி மக்களின் உணர்வுகளிலிருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கின்றது என்பதற்கான அப்பட்டமான சான்றாகும்.
கட்சியின் பதில் பொதுச்செயலாளராகப் பொறுப் பேற்றது முதல், எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகள் தந்தை செல்வாவின் பாரம்பரியக் கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்துள்ளன.
கட்சியின் ஒழுக்கத்தைப் பேணுகிறேன் என்ற போர்வையில், தனக்குச் சவாலாக இருக்கும் அல்லது மாற்றுக்கருத்துக் கொண்டவர்களைத் தந்திரோபாயமாக வெளியேற்றுவது அல்லது மௌனிக்கச் செய்வது அவரது அரசியல் பணியாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில், தமிழரசுக் கட்சியிலிருந்தோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தோ பல முக்கிய ஆளுமைகள் வெளியேறுவதற்கோ அல்லது வெளி யேற்றப்படுவதற்கோ சுமந்திரனின் நகர்வுகளே பிரதான காரணமாக இருந்தன என்பது இரகசியமான தொன்றல்ல. சட்டத்தரணியான அவர், தன் வாதத் திறமையால் கட்சியின் மத்திய குழுவிலும் அரசியல் குழுவிலும் உள்ள ஏனைய உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை மௌனிக்கச் செய்து, கட்சியைத் தன் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தீவிரமாக முயன்று வருகின்றார் என்பது வெளிப்படையானது.
தமிழரசுக்கட்சியின் ஆளுகையில் உள்ள மட்டக் களப்பு மாநகரசபையின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு பொதுநூலக கட்டடத்தை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்ட நிகழ்வில் சுமந்திரன் நடந்துகொண்ட விதம், அவரது மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டை மேலும் வெளிச்சமிட்டுக் காட்டி யுள்ளது.
ஜனாதிபதிக்கு முன்னால் உரையாற்றி அவர், ‘நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்ற ஜனாதிபதியின் கூற்றை வரவேற்று, அதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு அவசியம்’ என்று அவர் ஞாபகமூட்டிய போதிலும், மேடையில் அவர் காட்டிய அதீத இணக்க அரசியல் விமர்சனத்திற்குரியதாகும்.
நாட்டில் இன்னும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எட்டப்படாத நிலையில், ஜனாதிபதியுடன் நினைவுக்கல்லின் திரை நீக்கத்தைப் பகிர்ந்துகொண்டதை ‘அதிகாரப் பகிர்வுக்கான முன்னுதார ணம்’ என்று அவர் வர்ணிப்பது, யதார்த்தத்திற்குப் புறம்பான, வெறும் மேடைப் பேச்சாகவே சுருங்கிவிடுகிறது.
மறுபுறத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவும் கட்சிக்குள் இருக்கும் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகின்றது. அரசியலமைப்புப் பேரவையில் அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்பட்டார் என்பதும், அரசியல் குழுவின் தீர்மானத்தை மீறினார் என்பதும் அவர் மீதான குற்றச் சாட்டுகளாக முன்வைக்கப்பட்டாலும், இவற்றுக்குப் பின்னா லுள்ள பிரதான பின்னணி ‘தலைமைத்துவப் போட்டி’ என் பதில் மாற்றுக் கருத்தில்லை.
சிறிதரன் மீதான குற்றச்சாட்டுகளின் உள்ளடக்க த்தை பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனே தீர்மானிப்பார் என்ற சூழல் நிலவுவது, இந்த விசாரணையின் நடு நிலைமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இங்கு சிறி தரனை நியாயப்படுத்துவது என்பதற்கு அப்பால், அவர் தமிழ் மக்கள் மத்தியிலும், குறிப்பாக வடக்கிலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் மிக அசைக்க முடியாத ‘மக்கள் செல்வாக்குள்ள தலைவர்’ என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
தேர்தல்களில் தொடர்ச்சியாக அவர் பெற்றுவரும் பெரும்பான்மை வாக்குகளும், தமிழ் தேசியக் கோட்பாட்டில் அவர் கொண்டுள்ள தீவிர நிலைப்பாடும் அவரை மக்களின் பிரதிநிதியாக நிலைநிறுத்தியுள்ளது என்பது தான் பொதுப் படையான தமிழர்களின் உணர்வாகவுள்ளது.
அடிமட்ட மக்களின் ஆதரவில்லாத, வெறும் மேட்டுக்குடி வாதத் திறமைகளை மட்டுமே நம்பியிருக்கும் தலைமைகளுக்கு மத்தியில், சிறிதரன் போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவரைப் பழிவாங்கும் நோக்குடன் ஓரம் கட்ட நினைப்பது, தமிழரசுக் கட்சி தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் சூனியமாகும்.
மக்கள் பலம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த தலைவர்களை உள்வாங்கி அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக, அவர்களை வெளியே தள்ளுவது தமிழரசுக் கட்சிக்கு அண்மைய காலத்தில் தீராத நோயாகவே மாறி விட்டது.
தமிழரசுக் கட்சிக்குள் சிறிதரன் சுமந்திரன் ஆகிய இரண்டு அணிகளுக்கு அப்பால், இன்னுமிரண்டு அணிகள் என்று நான்கு அணிகள் இயங்குவதாக மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் குறிப்பிட்ட ‘பிளவுபட்டால் எந்தப் பக்கம் சேர்வது என்று தெரியாத மூன்றாவது அணி’ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறி நாத் குறிப்பிட்ட ‘பிளவு ஏற்பட்டால் என்ன செய்வது என்று தீர்மானித்துள்ள நான்காவது அணி’ ஆகிய கூற்றுகள், கட்சியின் உள்ளகச் சிதைவை அம்பலப்படுத்தியுள்ளன.
கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்று வதற்காகவும், தமது தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்காகவும் முக்கால் நூற்றாண்டுப் பாரம் பரியமிக்க பேரியக்கத்தை சிதைக்கப் பலர் துணிந்து விட்டனர். இந்தச் சூழலில், சிறிதரன் புதிய கட்சியைத் தொடங்குவதற்குத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள், தமிழரசுக் கட்சி உடையப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணியாகும்.
தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்ற ஆளுமைகள் வழிநடத்திய இந்தக் கட்சி, தற்போது அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய தெளிவான, ஆளுமைமிக்க தலைமையின்றித் தவிக்கிறது.
பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனின் தன்னிச் சையான போக்குகள், கட்சியை தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளிலிருந்து விலக்கி, கொழும்பைமையப் படுத்திய தாராளவாத, இணக்க அரசியல் தளத்திற் குள் சரணாகதி அடைந்து வருகிறது.
கொள்கைகளும் தத்துவங்களும் மட்டுமே தேர்தல்களில் வெற்றியைக் கொடுத்துவிடும் என்ற காலம் வேகமாக மாறி வருகிறது. வரலாற்றில் இறுக்கமான வலதுசாரிக் கொள்கைகளும், இடதுசாரிக் கொள்கைகளும் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில், 60 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே தமிழகத்தில் சவாலுக் குள்ளாகியிருக்கிறது.
இத்தகைய உலகளாவிய மற்றும் பிராந்திய அரசி யல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு, தமிழரசுக் கட்சி தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ளத் தவறிவிட்டது. இனியும் அந்தக் கட்சி அவ்விதமான செயற்பாடொன்றுக்கு தயாராகவும் இல்லை.
கடந்த பாராளுமன்றத் தேர்தல்களிலேயே தமிழ் மக்கள் மாற்றுத் தெரிவுகளை நோக்கி நகரத்தொடங்கி, தமிழரசுக் கட்சிக்கு தெளிவான முன்னெச்சரிக்கையைக் கொடுத்திருந்தனர். எனினும், ‘வீட்டுச் சின்னம்’ இருந்தால் மட்டுமே மக்கள் எப்போதும் வாக்களிப்பார்கள் என்ற மட்டற்ற அகந்தையில் கட்சியின் தற்போதைய அதிகாரமிக்க சுமந்திரன் அணியினர் இன்னும் இருப்பார்களாக இருந்தால் அதன் விளைவுகள் அவர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களின் எதிர்காலத்துக்கும் பாரதூரமாகவே இருக்கும்.
அதுமட்டுமன்றி சுமந்திரனின் மாறுபட்ட தந்தி ரோபாய நகர்வுகளால் சிறிதரன் போன்ற மக்கள் செல் வாக்குள்ள தலைவர்கள் வெளியேற்றப்பட்டு, கட்சி நான்கு துண்டுகளாகச் சிதறுமானால், அது தமிழ் தேசியப் பரப்பில் பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
தமிழ் மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்த ஐம்பதாண்டு காலப் பாரம்பரியம் மிக்க இந்த இயக்கம், தங்களின் சுயநலத் தலைமைத்துவப் போட்டியால் தடம் புரண்டு அழிவதைத் தடுக்க, தற்போதைய சுயநலத் தலைமைகள் தங்களை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
விசேடமாக கட்சியின் அனைத்து அதிகாரங்க ளையும் தன்வசம் வைத்து காய் நகர்த்தும் சுமந்திரன் கடந்த காலவிடயங்களை மறந்தாலும், இந்த மாதத்தின் இதுவரையிலான அவரது பகிரங்க கருத்துக்களை மீட்டிப் பார்த்தாலே பல விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரால் முடியும். இல்லையேல் தமிழ் மக்களால் முடியும். இம்மாதத்தின் முதலாம் திகதியான மே தின உரையில் ஜே.வி.பி.தலைமையிலான தேசி மக்கள் சக்தியை வடக்கு,கிழக்கில் காலூன்ற விடமாட்டோம் என்று அறிவித்தார்.
இரண்டாம் திகதி கொழும்பு இராமகிருஷ்ணன் மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் புகழ் விருதில் ஜனாதிபதி அநுரவுடன் கூட்டிணைந்து, பங்கேற்று நட்பு பாராட்டினார்.பேரவல நாளான மே 18இல் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை என்று வாதிட்டவர் திடீரென மாற்றமடைந்து இனப் படுகொலை என்பதை ஏற்று மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம் என்றுரைத்தார்.
மே 20 இல் அவர் வழிநடத்தும் கட்சியின் ஆளு கைக்குள் உள்ள மாநகர சபைக்குள் ஜனாதிபதி அநுரவை அழைத்து ஒன்றாக நினைவுக்கல் திரை நீக்கம் செய்யும் மனோநிலைக்கு திடீரென்று மாறினார்.
இந்த மாறுபட்ட வெளிப்பாடுகளை அவர் மனச் சாட்சியுடன் மீள்பரிசீலனை செய்து கொண்டாலே பல பிரச்சினைகளுக்கு அவராலே தீர்வினைக் காண முடியும். இல்லையென்றால் ஏலவே குறிப்பிட்டதைப் போன்று மேற்படி நான்கு விடயங்களை மட்டும் தமிழ் மக்கள் நான்கு தடவைகள் மீட்டிப்பார்த்தால் அவர்களாலேயே பல விடயங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.



