உலக அரசியல் வரலாற்றில், இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான ஈழத்தமிழர்களின் இறைமை 176 ஆண்டுகளாக பிரித்தானியாக் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து இயல்பாக ஈழத்தமிழர்களிடமே மீளவும் மீண்ட 54வது ஆண்டு 22.05.2026 இல் பதிவாகியது.
அது குறித்த வரலாற்று சான்றுகளை இலக்கு இவ்வாரத்தில் மீள் நினைவுறுத்த விரும்புகிறது.
1. ஈழத்தமிழர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் இன்று வரை வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகள் என்பதை இலக்கு முதலில் தெளிவாக்க விரும்புகிறது.
2. ஈழத்தமிழர்கள் நவீன அரசாக உலக வரலாற்றில் 13ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை விளங்கிய யாழ்ப்பாண அரசை போர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியாளர் 1619 இல் ஈழத்தமிழரின் யாழ்ப்பாண அரசின் இறைமை கைப்பற்றப்பட்டது என்பது வரலாறு. 22.06. 1658 இல் போர்த்துக்கேயக் காலனித்துவத்திடமிருந்த யாழ்ப்பாண அரசின் இறைமை டச்சுக்காரரால் கைப்பற்றப்பட்டது. 22.09.1795 இல் இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி மதராசிலிருந்து (இன்றைய சென்னை) தமிழகத்தையும் ஈழத்தையும் ஒரே அரசியல் அலகாக ஒரே சட்டமும் நிதியும் கொண்டு ஆளத் தொடங்கிய போதுயாழ்ப்பாண அரசின் இறைமை டச்சுக்காரரிடமிருந்து பிரித்தானியரைச் சென்றடைந்தது
3. ஆயினும் கண்டியரசினை 1815 இலும் ஈழத்தமிழரின் வன்னியரசினை 31.10.1832 இலும் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் கைப்பற்றும் வரை கண்டி அரசின் இறைமையும் வன்னியரசின் இறைமையும் தனித்துவமானதாகவே இருந்தன.
4. இதன் பின்னரே 1833 மார்ச்சில் கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் இலங்கைத் தீவு முழுவதினதும் ஒற்றையாட்சி ஆட்சியாளராகப் பிரித்தானியப் பேரரசு தன்னைக் கட்டமைத்தது. பிரித்தானிய காலனித்துவ அரசின் நீதி முறைமைக்கும் பொருளாதார முறைமைக்கும் இராணுவ நலன்களுக்குமாக இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வந்த ஈழத்தமிழர் எனப்படும் இலங்கைத் தமிழ்த்தேச இனத்தையும் சிங்களத் தேச இனத்தையும் அவற்றின் தனித்தனியான அரசுக்களின் நாட்டெல்லைகளையும் ஒன்றாக மக்கள் விருப்புப் பெறப்படாது பிரித்தானியக் காலனித்துவ அரசு இணைத்தது. இதன்வழி சிலோன் என்னும் அதுவரை இலங்கைத் தீவின் வரலாற்றில் இல்லாத ஒற்றையாட்சிப் பிரித்தானியக் காலனித்துவ அரசை பிரித்தானியா நிறுவியது. சிலோனின் தேசமக்களாகச் சிலனிஸ் என்னும் அதுவரை இலங்கைத் தீவின் வரலாற்றில் இல்லாத தேசமக்கள் இனமொன்றையும் பிரித்தானியா செயற்கையாகக் கட்டமைத்தமை வரலாறு.
5. இந்த பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியில் இழந்த தங்களின் இறைமையை மீளப்பெறவே தமிழர்களும் சிங்களவர் களும் தனித்தனியாகவும் இணைந்தும் பலவழிகளில் 1833 முதல் போராடினார்கள் என்பது வரலாறு.
6. 1920களில் சிங்கள இடதுசாரித்தலைவராகத் இலங்கைத் தீவில் முற்போக்குக் கட்சி அமைத்து தன்னை வெளிப் படுத்தத் தொடங்கிய எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கா பத்திரிகைகளுக்கு 19.05. 1926இல் எழுதிய ஆறு ஆக்கங்களில் இலங்கைத் தீவுக்கு கூட்டாட்சி முறைமையே காலனித்துவத்திடம் இழந்த யாழ்ப்பாண அரசினதும் கண்டி அரசினதும் கோட்டே அரசினதும் ஆட்சியை அந்த அந்த அரசுக்களின் மக்கள் முழுஅளவில் மீளப்பெற ஏற்புடையது என்று எழுதி இலங்கைத் தீவில் கூட்டாட்சியை பிரித்தானிய காலனித்துவ அரசிடம் கேட்ட முதல் இலங்கை அரசியல்வாதியாக விளங்கினார். யாழ்ப்பாண நாட்டுச் சபை கண்டி நாட்டுச் சபை காலி நாட்டுச்சபை மூன்றினதும் தனித்துவமான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் மக்கள் தமது அரசியல் உரிமைகளை மீளப்பெறுவர் என சிலோனுக்குப் பொறுப்பாட்சியை வழங்க பிரித்தானிய காலனித்துவ அரசால் நியமிக்கப்பட்ட டொனமூர் ஆணைக்குழுவிடம் அவரே முதன் முதலில் கோரினார்.
7. ஆனால் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் 04.02.1948இல் தாங்கள் செயற்கையாக உருவாக்கிய சிலோன் அரசுக்குச் சுதந்திரத்தை வழங்குகையில் ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களப்பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளு மன்ற முறைமைக்குள் சிங்களவர்களுடன் இணைத்த சோல்பரி அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் சுதந்திரம் வழங்கியது. இதன் மூலம் தமிழர்கள் மேல் சிங்கள நவகாலனித்துவ ஆட்சிமுறைமையையும், சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளு மன்றக்கொடுங்கோன்மை ஆட்சியினையும் பிரித்தானியா ஏற்படுத்தியதால் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை காலனித்துவத்தால் ஏற்படுத்தப்பட்டு காலனித்துவத்தால் தீர்க்கப்படாத ஐக்கிய நாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக இன்றும் உள்ளது என்பதை இலக்கு மீள்கவனப்படுத்தி இப்பிரச்சனை தீர்வு பெறும் வரை ஈழத்தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி ஒருவரை ஈழத்தமிழர்களின் இருப்பையும் வாழ்வையும் பாதுகாக்க நியமிக்க உலகெங்கும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் கேட்க வேண்டு மென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
8. சிலோனின் சுதந்திரத்திற்குப் பின்பும் சோல்பரி அரசியல் அமைப்பின் 29(2) பிரிவு ஈழத்தமிழர்களதும் சிங்களவர் களதும் தனித்தனியான இறைமைகளின் மீயுயுர் இறைமையாளராகப் பிரித்தானிய முடிக்குரிய அரசியே விளங்கினதாலும் அரசின் தலைவியாக அவரே தொடர்ந்ததாலும் தமிழ் அரசியல்வாதிகள் சனநாயக வழிகளில் போராடி தங்கள் அரசியல் உரி மையை அடையலாமென 24 ஆண்டுகள் முயற்சித்தனர். இவ்வாறு பிரித்தானிய அரசிடம் இறைமை பகிரப்பட்ட நிலையிலேயே சிலோனுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது என்பதற்கு இரஸ்யா 1948 முதல் 1956 வரை சிலோனுக்குத் தனியான உறுப்புரிமை ஐக்கிய நாடுகள் சபையில் கிடைப்பதை தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி சிலோனின் மீயுயுர் இறைமை தொடர்ந்தும் பிரித்தானிய மகாராணியிடமே இருப்பதால் அதனை தனியான நாடாக அனுமதிக்க இயலாதெனக் காரணங்காட்டித் தடுத்தமை அனைத்துலக சட்டச்சான்றாக உள்ளது. இது ஈழத்தமிழரின் சிங்களவர்களின் இறைமை தொடர்ந்தும் பிரித்தானிய அரசிடமே இருப்பதை உலகிற்குத் தெளிவாக்கியது.
அத்துடன் கோடீஸ்வரன் வழக்கில் பிரித்தானிய பிரிவிக்கவுன்சில் சிலோன் அரசாங்கத்தின் சிங்களம் மட்டும் சட்டம் சோல்பரி அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால் அதனை மீளப்பெறுவதுடன் கோடீஸ்வரனை வேலையை விட்டு விலத்திய நாள் முதலான சம்பளத்தைக் கொடுத்து மீளவும் பதவியில் அமர்த்த வேண்டுமெனவும் வழங்கிய தீர்ப்பு; உள்நாட்டுச் சட்டரீதியாகவும் பிரித்தானியாவிடம் இறைமை தொடர்ந்ததை சிலோன் அரசுக்கே உணர்த்திய வரலாறாக உள்ளது. இந்த பிரித்தானிய பிரிவிக்கவுன்சிலின் தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து 22.05. 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிறிலங்காவின் இடதுசாரிக்கட்சியினருடனான கூட்டாட்சி அரசாங்கம் சோல்பரி அரசியல் அமைப்பினை வன்முறைப்படுத்தி சிலோன் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நவரங்கலா மண்டபத்தில் சிங்கள பௌத்த சோசலிசக் குடியரசினைத் தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தியது.
இந்த அரசியலமைப்புக்கான அரசியல் நிர்ணய சபையில் தமிழ்ப்பாராளமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் மேலானவர்கள் பங்குபற்றாததினால் சிறிலங்கா சிங்கள பௌத்த சோசலிசக் குடியரசு அரசியலமைப்புக்கு ஈழத்தமிழர்களை ஆட்சிப்படுத்தும் சட்டத்தகுதி இழப்பு ஏற்பட்டது. இதனால் ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களவர்களுடன் இணைத்த சோல்பரி அரசியலமைப்பின் இணைப்பிற்கான பாதுகாப்பு அலகாக இருந்த சோல்பரி அரசியலமைப்பின் 29(2) ஐ இந்தக் குடியரசு அரசியலமைப்பு வன்முறைப்படுத்தியதால் பிரித்தானியரிடம் இருந்த ஈழத்தமிழரின் .இறைமை ஈழத்தமிழரிடமே மீண்டது. ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமாக (Nation with out State) மாறினர். இதனால் அன்று முதல் இன்று வரை அரசற்ற தேச இன மான ஈழத்தமிழர்கள் தேசியப் பிரச்சினை என்பது தங்களின் மக்கள் இறைமை தங்களுக்குத் தரும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்து தங்களின் பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் தாங்களே உறுதிப்படுத்தல் என்பதாக உள்ளது.
9. 07.02.1975ம் திகதிய காங்கேசன்துறைத் தொகுதியில் நடைபெற்ற ஈழத்தமிழரின் தன்னாட்சிப்பிரகடனத்துக்கான அடையாளக் குடியொப்பம் அதில் பல்லாயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்ற தந்தை செல்வநாயகம் அவர்களின் 10.02.1975ம் திகதிய சிறிலங்கா தேசிய சபை தன்னாட்சிப்பிரகடனம். அத்துடன் தான் 24 ஆண்டுகாலமாக கேட்டு வந்த கூட்டாட்சிக் கோரிக்கையிலிருந்து அந்தச் சிறிலங்கா தேசிய சபைத் தன்னாட்சிப் பிரகடனத்திலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் தன்னாட்சியின் அடிப்படையில் தன்னாட்சியே அவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளரச்சிகளையும் தரும் என்பதை உலகிற்கு உறுதிப்படுத்தியமை மற்றொரு வரலாற்று மாற்றம்.
10. தன்னாட்சிப்பிரகடனம் ஈழத்தமிழரின் அரசியல் கொள்கையாகவும் அதனை அடைதல் என்பது அதன் அரசியல் கோட்பாடாகவும் 14.05. 1976ம் திகதிய வட்டுக்கோட்டை தீர்மானத்தால் உலகிற்கு அறிவிக்கப்பட்டு 1977 தமிழர் தாயக குடியொப்பத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு தமிழீழ தேசிய சபைக்கான அரசியலமைப்பினை வெல்பவர் எழுதுவர் எனத் தெரிவிக்கப்பட்டு இதனை சனநாயக வழிகளில் சிறிலங்கா ஏற்க மறுத்தால் எந்த வழிகளிலும் அடைவோம் என்ற அந்தக் குடியொப்ப மக்களா ணையே 1978 முதல் 2009 வரையிலான ஈழத்தமிழரின் நடைமுறைரசுக்கான அனைத்துலக சட்டத்தகுதியை வழங்கியது என்பது வரலாறு.
இந்த ஈழத்தமிழர் வரலாற்றுப் பரிணாம வளரச்சிகளை கவனத்திலெடுத்து பண்டாரநாயக்கா கால 100 ஆண்டுப் பழமைச் சரக்கானதும் தந்தை செல்வநாயகம் அவர்களால் கைவிடப்பட்டதுமான கூட்டாட்சி கோரிக்கையில் மக்களை மயக்காது காலத்துக்கேற்ற இடத்துக்கேற்ற வகையில் ஈழத்தமிழரின் காலனித்துவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாண வன்னியரசுக்களின் நிலம் ஈழத்தமிழர்களால் “ இந்த மண் எங்களின் சொந்த மண்” எனப்படுவது பிரிவினையல்ல அதன் அடிப்படையிலேயே ஈழத்தமிழர்களின் மண் மேலான உரிமை தாயக உரிமை ஏற்கப்பட்டாலே அது ஈழத்தமிழருக்கான சமத்துவ சகோதரத்துவ சுதந்திர வாழ்வை உருவாக்கும் என்னும் உண்மையின் அடிப்படையில் இந்த ஈழத்தமிழர்களின் இறைமை அவர்களிடமே மீண்ட வரலாற்றின் 54 வது ஆண்டிலாவது ஈழத்தமிழர்கள் தேச நிர்மாணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது. இவ்வாறு ஒரு தொன்மையான மக்களினம் தனது வாழ்வை உறுதிப்படுத்த எடுக்கும் முயற்கிகளை வெறுமனே பயங்கரவாதமென முடக்க வேண்டாமென உலக மக்களிடமும் நாடுகளிடமும் உலக அமைப்புக்களிடமும் புலம் பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்று பட்டு கோரினாலே தாயகத்தில் மக்களுக்கான அரசியல் எதிர்காலம் உலகால் உறுதி செய்யப்படுமென்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
ஆசிரியர்




