இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
டெலிகிராம், வட்ஸ்அப் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடகப் பின்னணிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் இணையவழி நிதி மோசடிகள் குறித்து தினசரி முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.
கடந்த காலங்களில் இலங்கையில் தங்கியிருந்து இவ்வாறான இணைய மோசடிகளில் ஈடுபட்ட பல வெளிநாட்டவர்கள் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியுடன், கணினிகள் அல்லது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, தனிப்பட்ட தரவுகளைத் திருடுதல், வங்கிக் கணக்குகளை ஹேக் செய்தல், சமூக ஊடகக் கணக்குகளைக் கைப்பற்றுதல் மற்றும் போலி இணையத்தளங்களை உருவாக்கி பண மோசடி செய்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளன.
மோசடிக்காரர்கள், பெரும் தொகை லொத்தர் பரிசுகள் விழுந்துள்ளதாகக் கூறி ஏமாற்றுதல், மிக எளிதாக உடனடிக் கடன்களை வழங்குவதாகக் கூறி ஆசை காட்டுதல், பகுதிநேர அல்லது ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறி பெரும் தொகை பணத்தை மோசடி செய்தல் போன்ற உத்திகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.



