18.05. 2026 திங்கட்கிழமை 17வது ஆண்டாக அனைத்துலக முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலை நாள் உலகெங்கும் பதிந்து வாழும் அனைத்துலக ஈழத்தமிழர்களாலும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது. முதலில் இந்த சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பிற்கு தங்கள் இன்னுயிர்களை எதிர்வினையாற்றுவதில் அர்ப்பணித்த அனைத்து மாவீரர்களுக்கும் இலக்கு தனது வீரவணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறது. பாதிப்புற்று இன்று புனர்வாழ்வு புனரமைப்புத் தேவைகளில் உள்ள அனைவருக்குமான அனைத்துப் பகிர்வுகளும் புலம்பதிந்து வாழும் தமிழர்களால் இயன்ற அளவுக்கு பகிர்வுகள் மூலம் முன்னெடுக்கப்படுவதை ஊக்குவிக்கும் மாதமாக மே அமைய வேண்டுமென்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது. முள்ளிவாய்க்கால் கஞ்சி இந்த ஊக்குவிப்புக்கான அடையாளமாகத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரலாற்றை மீள்நினைவுறுத்தும் அதன் நோக்கில் வெற்றிபெற இலக்கு தன்னால் இயன்றதைச் செய்யும் என்பதையும் உறுதி கூற விரும்பகிறது.
சிறிலங்கா அரசின் ஆட்சியில் உள்ள இலங்கைத் தீவின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் 18.05. 2009 இல் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஆயுதங்கள் மௌனிப்பு அறிவிக்கப்பட்ட பின்னரே சிறிலங்கா ஈழத்தமிழினப் படுகொலையை சிறிலங்கா செய்தது என்பதால் உலகமே இதற்கான நீதியை வழங்க முடியுமே தவிர சிறிலங்காவால் முடியாது என்பதை இலக்கு இவ்விடத்தில் உலகிற்குத் தெளிவுபடுத்த விரும்புகிறது. இதுவே ஈழத்தமிழர் அனைத்துலக விசாரணை வேண்டுமென்பதன் காரணமாகவுள்ளது. மேலும் சிறிலங்கா அறிவித்த பாதுகாப்புப் பகுதிகளுக்கு ஈழத்தமிழர்கள்’ பாதுகாப்பையும் அமைதியையும் நாடி எதுவித ஆயுதங்களுமின்றிச் சென்ற நேரத்தில் சிறிலங்கா விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் மூலம் அம் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்வதற்கான தாக்குதல்களை அனைத்துலக சட்டங்களுக்கு எள்ளளவும் மதிப்பளிக்காது சிறிலங்கா மேற்கொண்டு 146000 க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனப்படுகொலை செய்த வரலாற்றுச் சம்பவத்தை உலக வரலாறு 18.05. 2009 இல் பதிந்து கொண்டது. அத்துடன் 21ஆம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையாகவும் 20ஆம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையான ஹிட்லரின் யூதஇனப்படுகொலையில் கையாளப்பட்ட மோசமான சித்திரவதை முறைகளை விட மிகமோசமான மனிதசித்திரவதைகளை கொண்ட இனப்படுகொலையாகவும் இந்த முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலைகள் அமைந்தன என்பது வரலாறாக உள்ளது. நந்திக்கடற்கரை சிறிலங்காவின் இந்த மிகமோசமான இனப்படுகொலைகளுக்கும் மனித சித்திரவதைகளுக்கும் நிரந்தரச் சாட்சியாக இன்றும் உள்ளது.
இந்த ஈழத்தமிழ்மக்கள் மேலான சிறிலங்காவின் போரின் நோக்கம் ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்கி அவர்கள் தங்கள் உயிருக்கும் உடலுக்கும் உடமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் சிறிலங்கா தனது அரசபயங்கரவாத்தினாலும் தனது முப்படைகளினாலும் ஏற்படுத்தி வந்த இனங்காணக் கூடிய அச்சங்களுக்கு எதிராகப் பாதுகாப்பாக வாழ உருவாக்கிய 31 ஆண்டுகால அவர்களின் நடைமுறையரசை அழித்து அவர்களை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்புச் செய்வதும் ஈழத்தமிழரின் அரசின் அனைத்து உட்கட்டுமானங்களையும் அழித்து ஈழத்தமிழர்களை அவர்களின் தாயகத்தில் அடிமைப்படுத்துவதுமாக இருந்தது.
இந்தச் செயற்பாட்டில் சிறிலங்கா அனைத்துலக சட்டங்கள் அனைத்தையும் மீறி எவ்வித அச்சமுமின்றி ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க இனஅழிப்பை இனப்படுகொலையை உத்தியாகக் கையாண்டமையே இன்றைய உலக அரசியல் ஒழுங்குமுறை அழிப்புக்கான முன்னோடியாகச் உலகம் முன்னிறுத்துகின்றது. அன்று சிறிலங்கா செய்தவைகளே இன்று உலகின் போர்முனைகளில் மீளுருப்பெறுகின்றன. எனவே சிறிலங்கா அரசாங்கமானது ஈழத்தமிழரிறைமையொடுக்தத்துக்காக மட்டுமல்லாமல் உலக அரசியல் ஒழுங்குமுறை அழிப்பாகவும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிகழ்த்தியது என்ற வரலாற்று உண் மையை சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலையின் 17வது ஆண்டிலாவது உலக நாடுகளுக்கும் அனைத்துலக ஊடகங்களுக்கும் உலகெங்கும் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் தெரியப்படுத்த வேண்டுமென்பது இலக்கின் கருத்தாக உள்ளது. அப்பொழுதுதான் 17 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களால் தங்களுக்கு நிகழ்த்தப்பெற்ற இனஅழிப்புக்கான அனைத்துலக நீதியைப் பெற இயலாதுள்ள நிலை மாறும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
சிறு தேச இனங்களின் பிரிக்க முடியாத மனித உரிமையான தன்னாட்சி உரிமையை பயன்படுத்தி, அவை தங்களின் அரசியல் எதிர்காலத்தை அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டிய ஐரோப்பிய நாடுகள் சபை உலகின் மூத்த குடிகளின் ஒருவராகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் இலங்கை தீவில் காலனித்துவ போர்த்துக்கேயர் 1505 இல் கால்வைத்து 114 ஆண்டுகளின் பின்னர் கிபி 1619 இல் பல போராட்டங்களை நடத்தி யாழ்ப்பாண அரசை கைப்பற்றும் வரை தனியரசில் வாழ்ந்திருந்த ஈழத் தமிழர்களை சிறிலங்கா இன அழிப்பின் மூலம் அவர்களின் இறைமையை ஒடுக்கிய நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஏன் சிறிலங்காவை இன அளிப்பாளர்களாக அறிவிக்கவில்லை என்பதற்கு இன்று வரை உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை.
அதனால் உலகின் அமைதியும் பாதுகாப்பும் இன்று சீரழிகின்றது என்பதே உண்மை. இதே ஐக்கிய நாடுகள் சபை இனியேனும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சனை காலனித்துவ விடுதலையின் பொழுது தீர்க்கப்படாத ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாக உள்ளது என அறிவிக்குமா? ஈழத் தமிழர்கள் தங்கள் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்களின் தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் சபை தனது சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமித்து ஈழத் தமிழர்களின் சமத்துவ சகோதரத்துவ சுதந்திர வாழ்வை உறுதி செய்யுமா என்பன இன்று ஈழத் தமிழர்களுக்கு இடையே உள்ள கேள்விகள். யாழ்ப்பாண மாவட்ட சிறிலங்கா பாராளுமன்ற பிரதிநிதியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 2023 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் வருடாந்த கூட்ட அமர்வில் இந்த சிறப்பு பிரதிநிதிக் கோரிக்கையை முன்வைத்திருந்தமையை இலக்கு இங்கு மீள் நினைவு கூறுகின்றது. ஆயினும் அதற்கான செயல்திட்டம் எதுவும் இதுவரை ஈழத் தமிழரால் முன்வைக்கப்படவில்லை என்பதையும் இலக்கு கவனப்படுத்தி இவ்வாண்டிலாவது இதற்கான செயல் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என இலக்கு அழைக்கிறது.
01. ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, 02. இலங்கைத் தீவின் பாதுகாப்பு, 03. இந்தியப் பாதுகாப்பு, 04. குளோபல் சவுத்தின் பாதுகாப்பு, 05. உலகப்பாதுகாப்பு என்பன முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் பின்னணியில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய காலமிது. அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் தாயகத்தின் பாதுகாப்பான அமைதி வாழ்வின் முக்கியத்துவம் உணரப்பட்டு காலனித்துவ காலத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாண வன்னி அரசுக்களின் நிலப்பரப்பில் ஈழத்தமிழர்கள் இந்த மண்’ எங்களின் சொந்த மண் என்கின்ற அவர்களின் மக்கள் இறைமையுடன் வாழ்வதற்கான முறைமை அனைத்துலகத்தினரால் உறுதி செய்யப்பட்டாலே மேலே குறிப்பிட்ட ஐந்து பாதுகாப்புக்களும் உறுதி பெறும் என்பது இலக்கின் உறுதியான எண்ணம்.
மேலும் முள்ளிவாய்க்கால் உட்பட ஈழத்தமிழின அழிப்புக்களின் நுட்பங்கள் தேவைகள் அறிவார்ந்த முறையில் கண்டறியப்பட்டு ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதிப்படுத்துவதற்கான கட்டமைப்புக்கள் அரசியலுக்கு அப்பால் இன்றைய உலக மாற்றங்களுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்றாலே முள்ளிவாய்க்கால் என்பதை வரலாற்று எழுச்சிக்கான சக்தியாக ஈழத்தமிழர்களால் மாற்ற முடியும் என்பதே இலக்கின் எண்ணம்.
முள்ளிவாய்க்கால் குறித்த உண்மையின் பதிவுகள் ஊடக வடிவுகள் மானிடச் சாட்சிகள் வேகமாக பலவழிகளிலும் வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட வேண்டும். அதன் வழியாக உலகு முள்ளிவாய்க்காலை அதன் உண்மை வடிவில் உணரும் பொழுதே அது எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்தியத் துணைக்கண்டத்திலும் உலகிலும் ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகும்.அதன் பின்னணியிலேயே முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கான தண்டனை நீதியும் பரிகார நீதியும் நடைமுறைச்சாத்தியமாகும் என்பதையும் ஈழத்தமிழர்களின் இறைமையின் மீளுறுதியால் மட்டுமே மீண்டுமொரு இத்தகைய இனஅழிப்பை ஈழத்தமிழர்கள் சந்திக்காத பாதுகாப்பான அமைதியான வாழ்வும் வளரச்சிகளும் ஏற்படும் என்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
ஆசிரியர்




