இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான FBI-யின் விசேட “குழு” ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியாகியிருந்த தகவல்கள் தவறானவை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பு முறைகளைப் போலவே, இலங்கையிலும் அமெரிக்க தூதரகத்தின் கீழ் FBI Legal Attaché அதிகாரி ஒருவர் பணியாற்றி வருவதாகவும், அவர் தேவையான சந்தர்ப்பங்களில் இலங்கை சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் துல்லியமான தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என்றும், தவறான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் சில ஊடகங்களில் மற்றும் சமூக ஊடக தளங்களில், இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்காக அமெரிக்க FBI குழு நேரடியாக வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியிலேயே இந்த விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



