அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, நாட்டின் பொது மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளிலும் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
டொலர் மதிப்பு குறைவாக இருந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட மருந்துத் தொகுதிகளை விடுவிப்பதற்கு, இறக்குமதியாளர்கள் இப்போது திட்டமிட்டதை விட அதிகளவு ரூபாய் பணத்தைச் செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புதிய மருந்து இருப்புகளை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கான செலவும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
வைத்தியர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் ஏற்கனவே சில வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நிலைமை இப்படியே தொடருமானால், கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் கூடிய சுகாதார நெருக்கடியை இலங்கை மீண்டும் சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.
உள்நாட்டில் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான செலவு அதிகரிப்பதனால், அது திறைசேரிக்கு தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இந்த பாரிய சுகாதார நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, மருந்து இறக்குமதிக்கான வரிச் சலுகைகள் மற்றும் இதர நிவாரண வழிமுறைகளை வழங்குவதில் திறைசேரி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.



