தமிழ் மொழி மூலமான தகவல் அறியும் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தமிழ் மொழியில் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், அரச திணைக்களங்களில் முதற்கட்டமாக கோரப்படும் தகவல்கள் மறுக்கப்படும் பட்சத்தில், அதே திணைக்களத்தின் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு விண்ணப்பதாரிகள் மேன்முறையீடு செய்கின்றனர்.

அங்கேயும் நீதி கிடைக்காத நிலையில், இறுதியாக கொழும்பிலுள்ள தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் பொதுமக்கள் உரிய முறைப்படி முறையிடுகின்றனர்.

ஆனால் அங்கேயும் தங்களது விண்ணப்பங்களுக்கு உரிய பதில்கள் கிடைப்பதில்லை எனவும், தமிழ் மொழி மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் மேன்முறையீடுகள் போதிய கவனத்திற்கு உட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுசமீபகாலமாக வலுவாக எழுந்துள்ளது.

மொழிபெயர்ப்புப் பற்றாக்குறை, தமிழ் பேசும் அதிகாரிகளின் ஆளணி பற்றாக்குறை போன்ற காரணங்களால் தமிழ் விண்ணப்பதாரிகளின் கோரிக்கைகள் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்படுவதாக அல்லது கவனத்திலேயே எடுக்கப்படாதுள்ளதாக பாதிக்கப்படுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசமைப்பின் படி தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நாட்டில், தகவல் அறியும் உரிமை போன்றதொரு ஜனநாயகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இத்தகைய மொழிசார்ந்த பாகுபாடுகளும், புறக்கணிப்புகளும் தொடர்வது தமிழ் மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.