இலங்கையில், நிலவும் மோசமான காலநிலை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (35-45) கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



