போர் நிறுத்தத்திற்குள் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தத்திற்குள் தாக்குதல் என்ற புதிய உதியுடன் ஈரான் அமெரிக்க போரின் போர் நிறுத்தம் பயணிக்கின்றது. ஈரானுடனான 40 நாட்கள் போரை முடி வுக்கு கொண்டுவர பாக்கிஸ்தானின் உதவியை நாடிய அமெரிக்கா தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுப்பது டன், அமெரிக்காவின் தோல்வி என்பது அந்த பிராந்தியத் தில் இஸ்ரேலின் தோல்வியாகவே முடியும் என்பதால் போரில் இருந்து வெளியேற முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே தான் போர் நிறுத்தம் அறிவித்த கையுடன் ஈரான் மீதான கடல் முற்றுகையை கொண்டுவந்திருந்தது. கடல் முற்றுகை மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கி ஈரனை தனது நிபந்தனைகளுக்கு இணங்க வைப்பது ஒரு உத்தியாக உள்ள அதேசமயம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய தனது ஆதரவு நாடுகளை அணிதிரட்டி ஹார்மூஸ் நீரிணையை கையகப்படுத்துவது மறு உத்தி.
இந்த நடவடிக்கையில் பல ஈரானின் கப்பல் கள் திரும்பி அனுப்பப்பட்டன இரண்டு கப்பல்கள் அமெரிக் காவின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன இரண்டு கப்பல்கள் அமெரிக்க கடற்படை மற்றும் வான்படையினரால் தாக்கப்பட்டிருந்தன. பதிலடியாக ஈரானும் இரண்டு கப்பல் களை கைப்பற்றியிருந்தது. 3 கப்பல்கள் மீது தாக்கு தல்களை நடத்தியிருந்தது. ஆனாலும் மேற்குலக ஊடகங்களின் படி ஈரானின் 60 விகிதமான எண்ணெய்க் கப்பல்கள் வர்த்தக நடைவடிக்கையில் ஈடுபடுவதை அமெரிக்காவின் முற்றுகை யால் தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் தான் சுதந்திர நடவடிக்கை என்ற ஒன்றை அமெரிக்க அதிபர் ட்றம்ப் கடந்த 3 ஆம் நாள் அறிவித்திருந்தார். அதாவது அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட விமானங்களின் உதவியுடன் ஹார்மூஸில் உள்ள 2,000 கப்பல்களையும், 20,000 பணியாளர்களையும் மீட்கும் நடவடிக்கை அது. ஆனால் 21 மைல்கள் அகலம் கொண்ட ஆழம் குறைந்த கடற்பரப்பில், ஈரானின் 350 கி.மீ நீமமான கரையோர பாதுகாப்புக்களை தாண்டி அதனை செயற்படுத்துவது என்பது கடினமானது.
அமெரிக்காவின் “சுதந்திரத் திட்டத்தை” ஈரான் எவ்வாறு முறியடித்தது? என்பது குறித்து லெபனான் செய்தித்தாள் அல்-அக்பர் தெரிவித்துள்ளதாவது. நெகிழ் வுத்தன்மை, படைகளைப் பரவலாக்குதல், பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் எந்தவொரு நேரடி இராணுவத் தலையீட்டின் செலவுகளையும் அதிகரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு கடற்படை உத்தியை தெஹ்ரான் பின்பற்றியது.
இந்தக் கட்டமைப்பிற்குள், கடற்படை மோதலை நிர்வகிப்பதற்கான படைக்கலங்களை தெஹ்ரான் பெற்றது. இந்தச் படைக்கலங்களில் வேகமான மற்றும் இலகுவான படகுகளைப் பயன்படுத்தி “தாக்குதல் நடத்தும்” தந்திரம். பாரம்பரியமான கனரகப் போர்க்கப்பல்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, அதிவேகத்தில் நகரக்கூடிய மற்றும் வெவ்வேறு திசைகளிலிருந்து ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தக்கூடிய ஆயுதம் ஏந்திய படகுகளின் ஒரு பரந்த வலையமைப்பை ஈரான் உருவாக்கியது.
அவர் கூறியது போல ஈரானின் படைத்துறை உத்தி ஒருபுறம் இருந்தாலும், சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தளங்களை அமெரிக்காவின் சுதந்திர நடவடிக்கையின் தாக்குதல் திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கவில்லை என என்.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தரப்பு சவுதி அரேபியாவுடன் பேச்சுக்களை மேற்கொண்டபோதும் அது கைகூடவில்லை. தாக்குதல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு சவுதி மற்றும் குவைத்தின் வான்பரப்புக்கள் இல்லாது தாக்குதல் நடத்தமுடியாது என்பதாலும், ஈரானின் பதில் தாக்குதல்கள் கடுமையாக இருக்கும் என்பதாலும், ஏனைய அமெரிக்க கூட்டணி நாடுகள் ட்றம்பின் திட்டத்தை உதாசீனப்படுத்தியதாலும் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் அந்த திட்டம் தோல்வியடைந்தது.
அதேசமயம், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் குறித்த அமெரிக்க தலைமையில் வளைகுடா நாடுகள் கொண்டுவரவுள்ள ஐ.நா. தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்ய விருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.. அதற்கான அவர்களின் காரணம், போரைத் தொடங்கியதற்காக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அந்த வரைவு குற்றம் சாட்டவில்லை என்பதாகும், கடந்த முறை கொண்டுவரப்பட்ட தீர்மானமும் ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளாவ் வீட்டோ செய்யப்பட்டிருந்தன.
அதாவது அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சியும் தோல்வியையே சந்தித்து நிற்கின்றது. இந்த நிலையில் தான் கடந்த வியாழக்கிழமை(7) இரவு அமெரிக்காவின் மூன்று அழிப்பான் கப்பல்கள், எரிபொருள் தாங்கி கப்பல்களுக்கு பின்னால் நிலையெடுத்து ஹார்மூஸ் நீரிணையை கடக்க முற்பட்டிருந்தன. அதன் போது இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்திருந்தன.
மூன்று அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள், பல அடுக்கு பாதுகாப்பு அரண்களின் (எரிபொருள் டேங்கர் கள்) பாதுகாப்பின் கீழ் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல முயன்றன, ஈரானியர்களும் அதற்குத் தயாராக இருந்தனர். ஈரானியர்கள் அந்தக் கப்பல்களை எதிர் கொண்டனர், ஆனால் பல அடுக்கு பாதுகாப்பு அரண்கள் தோல்வியடைந்ததால், அமெரிக்கா பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தோல்வியுற்ற பின்வாங்கல் என்ற கதையை மாற்றுவதற்காக, அவர்கள் ஈரானியத் துறைமுகங் கள் மற்றும் கப்பல்கள் மீது ஏவுகணைகளை ஏவினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சண்டை தீவிரமடைந்தபோது, சவூதி அரேபியாவும் குவைத்தும் அமெரிக்க விமானப்படைத் தளங்களுக்கான அனுமதியை துண்டித்தன. ஆறு மணி நேரம் கழித்து, அவை அதை மீண்டும் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. வளைகுடா நாடுகள் இந்தப் போரில் இருக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகின்றது. மேலும் வளைகுடாவில் இருந்த அமெரிக்காவின் ஆளுமையின் இழப்பாகவும் இதனை கருதலாம்.
எனினும் ஈரானின் முதல் ஏவுகணை ஏவப்படு வதற்கு முன்பே மத்திய கட்டளை ஒரு தாக்குதல் திட்டத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தது. கிஷ் மற்றும் பந்தர் அப்பாஸில் உள்ள ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது, ஆனால் இது போர் மீண்டும் தொடங்குவதைக் குறிக்கவில்லை என்று வாஷிங்டன் கூறியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜைரா துறைமுகம் மீது ஈரான் 15 ஏவுகணைகளை ஏவியதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது.
சமீபத்திய நாட்களில், அமெரிக்கப் போர்க்கப்பல் கள் ஓமானின் கடல் பகுதியில் உள்ள ஒரு குறுகிய பாதை யைப் பயன்படுத்தி ஹோர்முஸ் வழியாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன, இது ஈரானின் ஒட்டுமொத்த உத்திக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கப்பல்கள், ஜலசந்தியைக் கடக்க முயற்சிக்கும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் முயற்சியில் நிலைகளை எடுத்துள்ளன. அமெரிக்காவின் இந்த திட்டத்தை முறியடிக்க வேண்டிய நிலையில் ஈரான் உள்ளது எனவே தான் அது அமெரிக்க அழிப்பான்களை நோக்கி ஏவுகணைகள், ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மற்றும் அதிவேக விரைவுப் படகு கள் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மூன்று அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சேதமடைந்து ஓமான் கடலை நோக்கித் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை, கூறிய அதே பகுதியில், ஓமானின் முசந்தம் மாகாணத்திற்கு அப்பால் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் தீ பற்றிக்கொண்டதை நாசா செயற்கைக்கோள் தரவுகள் காட்டுகின்றன. எனினும் இந்த கட்டுரை எழுதப்படும் போது அது யாருடைய கப்பல் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
அமெரிக்க தாக்குதலின் பொருள் போர் நிறுத்தம் முடிந்துவிட்டதா என்று ஏபிசி பத்திரிகையாளர் அமெரிக்க அதிபரிடம் கேட்டபோது, அவர் ‘இல்லை, இல்லை, போர் நிறுத்தம் இன்னும் அமுலில் உள்ளது. அது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. ஈரானிய இலக்குகள் மீதான பதிலடித் தாக்குதல்கள் ஒரு ‘நட்புத் தாக்குதல்’ மட்டுமே என்று தெரிவித்தார் என்று அந்த ஊடகவியலாளர் தெரிவித் துள்ளார்.
நட்பாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தலாம் என்பது தற்போது உலகிற்கு புதிய தகவல், அதாவது ஈரான் தனது பலத்தை தக்கவைத்துள்ளது அதனை உடைப்பதற்கு உலக வல்லரசால் கூட முடியவில்லை. மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் அதனை அமெரிக்காவால் எதிர்கொள்ள முடி யாது என்பதையே இது காட்டுகின்றது.
உலகம் ‘அழிவின் மூலம் அதிகாரம்’ என்பதற்குப் பதிலாக ‘சீர்குலைப்பின் மூலம் அதிகாரம்’ என்ற புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ட்ரோன்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் போன்ற மலிவான வழிகளைப் பயன்படுத்தி, சிறிய சக்திகள் இப்போது வல்லரசுகளைச் சீர்குலைக்கும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி மீள்வது என்று டிரம்ப் நிர்வாகத்திற்கு தெரியவில்லை, தடைகளைத் தளர்த்துவதற்கும் ஈரானிய ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் ஈடாக, ஈரான் தனது அணுசக்தித் திட்டத் தின் ஒரு பகுதியைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கும் ஒரு போர்நிறுத்தமே வாஷிங்டனுக்கான சிறந்த சூழ்நிலை என்று அமெரிக்க எழுத்தாளர் ஃப்ரீட்மேன் தெரிவித்த கருத்தே இங்கு பொருத்தமானது.



