
இருபெரும் திராவிட கட்சிகள் 69 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த நிலையில், புதிய அரசை அமைத்து முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் முன்னிலையில் விஜய் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.
விஜயைத் தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
முதலமைச்சரின் முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் உத்தரவு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளையும் விஜய் பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து தனது முதல் உரையில் விஜய், “மக்கள் நலன்களை மட்டுமே லட்சியமாக கொண்ட நம் அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீண் சக்ரவர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தவெக அரசுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி ” என்றார்.
மேலும் மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பேன். பெண்கள் பாதுகாப்பு கடுமையாக கடைபிடிக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இன்றிலிருந்தே எடுப்பேன். நம் பிள்ளைகளை அதிலிருந்து காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. எல்லோருக்கும் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்வேன்.” என்றார்.
“என்னை கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தாலும், நண்பர்கள், எதிரிகள் யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்களே.
கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முதன்மை கவனம் செலுத்தப்படும்.
மக்களின் பணம் எனக்கு தேவையில்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், என் அரசில் இருப்பவர்களாக இருந்தாலும் விடமாட்டேன்.
‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என ஆட்டம் ஆடலாம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இப்போதே மனதிலிருந்து எடுத்துவிடுங்கள்.எங்களுக்கு வாக்களித்த ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் நன்றி” என விஜய் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.



