தையிட்டியில் அளவீடுகளை மேற்கொள்ளவே எதிர்பார்ப்பதாக இளங்குமரன் தெரிவிப்பு

“தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் என படம் காட்டி இனவாதிகளுக்குத் தீனி போடுகின்றனர்” என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தையிட்டி பகுதியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டு காணி அளவீடு இடம்பெறாது போனது.
மீண்டும் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.

“இந்த விகாரையானது எமது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது இல்லை, காணிகளை மீளக் கையளிக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.
எமது அரசாங்கத்தில் காணிகளைச் சுவீகரிக்கும் எண்ணம் எமக்கில்லை” என்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

காணி உரிமையாளர்களுடன் மீண்டும் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் எவரும் வரவில்லை, எழுத்து மூலத்தை விட எம் மீதான மக்களின் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்” என்று பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார்.

“விகாரை விடயத்தில் பலாலி காவல்துறையினர் பாதுகாப்புக் கடமைகளையும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.