2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னதாக, அது குறித்த எச்சரிக்கை அடங்கிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்களை (Screenshot) சிவில் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இடையே பரிமாறப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செய்திகளில், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சகாக்கள் இலங்கையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வெடிபொருட்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒத்திகை குறித்தும் அந்த கருத்து பகிர்வில் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், தேவாலயங்கள் மற்றும் விருந்தகங்களை இலக்கு வைத்து ஏப்ரல் 21 அல்லது அதற்கு முன்னதாக எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அந்தச் செய்திகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்படி, ஏப்ரல் 4 ஆம் திகதியே இவ்வாறானதொரு தாக்குதல் பற்றிய முதற்கட்ட தகவல்கள் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கிடைத்த இந்த எச்சரிக்கைகள், ஏப்ரல் 7 ஆம் திகதி தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸுக்கும், ஏப்ரல் 8ஆம் திகதி பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன
தொடர்ந்து ஏப்ரல் 9 ஆம் திகதி உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்ற போதிலும், இந்த அச்சுறுத்தல் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தற்போது வெளியாகியுள்ள இந்த வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்களின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல்கள் எவையும் வழங்கப்படவில்லை.



