ஈரானுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் தொடர்புடைய 35 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்கள் ஈரானின் ‘மறைமுக வங்கி அமைப்பின்’ ஒரு பகுதி என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நபர்கள் ‘பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்’ என்றும், ‘பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள்’ என்றும் அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையின்படி, “இந்த வலையமைப்புகள் சட்டவிரோத எண்ணெய் விற்பனை மூலம் பணம் ஈட்டியுள்ளன, ஏவுகணை மற்றும் ஆயுத உதிரிபாகங்களை வாங்கியுள்ளன, மேலும் ஈரானுடன் தொடர்புடைய போராளிகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளன.”

இந்த வலையமைப்புகள் ஈரானின் இராணுவம் மற்றும் புரட்சிகர காவல் படைக்கு உலகின் நிதி அமைப்பை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இதற்கு முன்பும் கூட, ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.