அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, ஒரே அணியில் அல்லது ஒருங்கிணைந்த கருத்துக்களை தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வைப்பது அதன் வெற்றிக்கான முக் கிய காரணியாகும்.
புதிய அரசியலமைப்பில் மலையக மக்கள், சிறு பான்மையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நலன் களைக் கருத்திற்கொண்டு, அமைப்புகள், குழுக்கள் மற்றும் தனிநபர்கள் ஒருங்கிணைந்த கருத்துக்களை முன் வைக்க வேண்டும்.
மக்கள் கருத்தறியும் குழுவின் ஊடாக, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒருமித்த கோரிக்கைகளை முன்வைக்க முடியும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை: இலங்கையின் அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுவதால், அரசியல் கட்சிகளுக் கிடையிலான இணக்கப்பாடு மற்றும் ஒருமித்த கருத்து முக்கியமானது.
அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டாட்சி தத்துவம் போன்ற விடயங்களில், ஒரே அணியில் கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது, பேரம் பேசுதல் மற்றும் ஒருமித்த முடிவுகளை எடுப்பது எளிதாகும்.
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 78 ஆண்டுகாலமாக தொடர்ந்தாலும் கடந்த 2009 மே 18 ல் முள்ளிவாய்கால் பேரனர்த்தம் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போர் மௌனத்திற்கு பின்னர் எதிர் வரும் 2026 மே 18 ல் 17 ஆண்டுகளாக தமிழ்தேசிய கட்சி கள் ஒற்றுமையின்றி சிதறிய நிலையில் ஒருமித்து கருத் தொற்றுமையாக ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை தயாரிக்க முடியவில்லை. தேர்தல் அரசியலில் பதவியை மையப்படுத் தியதாகவே தமிழ்த்தேசிய அனைத்துக்கட்சிக ளும் உள்ளன.
கொள்கைரீதியிலான தேர்தல் அரசியலில் மக்களை அணிதிரட்ட முடியாமல், கோடியிருந்தால் மக்களை தம்பக்கம் ஈர்க்கலாம் என்ற கருத்தே கடந்த 17 ஆண்டுகளாக ஈழத்தில் தமிழ் மக்களை சில கட்சிகள் தம்வசமாக்கியும், தனிநபர்களை முதன்மைபடுத்திய அரசியலாகவுமே செயல் படுவதை காணலாம்.
கடந்த 2024 செப்டம்பர் 21 ல் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் கொள்கையை பலமாக காட்டி வடகிழக்கு மக்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டலாம் என குடிசார் பொது அமைப்புகள் எடுத்த நல்ல முயற்சியினையும் தட்டிக்கழித்த பிரதான கட்சியான இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் ஒரு அணியினர் அதனை முறியடிக்க சிங்கள தேசியவாதத்துக்கு சஜீத் பிரமதாசாவை ஆதரித்ததும், மற்றொரு கட்சியான ஒரு நாடு இரு தேசம் என கூறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதற்கான பிரசாரங்களை முன்எடுத்தமையாலும் அவர்களுடைய பிரசாரங்களைத் தாண்டி 226343 வாக்குகளை மட்டும் தமிழ்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனால் பெறமுடிந்தது.
இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்திருப்பின் ஏறக்குறைய ஐந்து இலட்சம் வாக்குகளை பெற்றிருக்கலாம் அதனூடாக சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒரு கொள்கைரீதியாக ஒற்றுமையாக உள்ளனர் என்பதை உலகத்துக்கு நிரூபித்தும் இருக்கலாம். இப்போது 2024 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களுடன் ஆட்சியமைத்த பின்னர்தான் தாம் விட்ட தவறுகளை தமிழ்த்தேசிய கட்சிகள் உணர்ந்துள்ளன, இதனை நன்கறிந்த வடகிழக்கு ஆயர்களும், மற்றும் தமிழ் சட்டத்தரணிகளும் தமிழ்தேசிய கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி ஒரு அரசியல் நகலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். யார் குற்றியும் அரிசியாக வேண்டும் என்பதைப்போல் யாராவது எடுக்கும் இந்த முயற்சியை பாராட்டவேண்டும். அது வெற்றியடைய வேண்டும் என்பதே சகல தமிழ் மக்களின் எதிர்ப்பார்பு.
ஆனால் இப்போது தமிழ் சட்டத்தரணிகள் கடந்த 2026 மார்ச் 02 ம் திகதி தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து இனப்பொதுப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிய பயணத்தை வேகப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் தெரிவித்திருந்த நிலையில் 2026 ஏப்ரல் 09 ல் மீண்டும் கூடியவர்கள் வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக, தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பின் கீழ் குழு நியமிக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்தக் கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன், தமது ஒருங்கிணைப்பின் கீழ் இக்கலந்து ரையாடல் நடைபெற்றதாக தமிழ் சட்டத்தரணி கள் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கான புதிய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து கட்சிகள் இடையே ஏகமனதாக இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது கடந்த 2026 ஏப்ரல் 18 ல் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் இருவரும் கையொப்பம் இட்டு தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர் அதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனித்து செயல்படுவதாகவும் அவர்களால் இனப்பிரச்சனைக்கான திட்டவரைவு 28 பேர் கையொப்பம் இட்டு கடந்த 2026 ஏப்ரல் 17 ல் வெளியிட்டுள்ளனர். எனவே இதில் தமக்கு சந்தேகம் உள்ளதாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் சட்டத்தரணி பேரவை என்ன பதில் கொடுப்பார்கள் அல்லது தொடர்ந்து ஒற்றுமைக்கு இது தடையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுவதற்கு பல தடைகளை சட்டத் தரணிகள் பேரவை தாண்டவேண்டியுள்ளது என்பது மட்டும் உண்மை. சாண் ஏற முழம் சறுக்கும் சமாதான முயற்சியாகவே தென்படுகிறது. இதேவேளை 2026 மார்ச் 18 ல் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் கூடிய யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆயர்களும் குரு முதல்வர்களும் தமிழ்தேசிய கட்சிகளை பொதுவான ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். இவர்களுடைய அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி என்னால் மேலதிக தகவல்களை பெறமுடியவில்லை.
ஆயர்களுடைய நல்ல முயற்சியும், தமிழ் சட்டத் தரணிகள் பேரவையின் நல்ல முயற்சிகளும் பாராட்டப் படவேண்டிய ஒன்று, ஆனால் தமிழ்தேசிய கட்சிகளில் உள்ள சிலருடைய அடிப்படை சிந்தனை தம்மை விட்டால் ஆளில்லை. “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” நாமே, தமக்கு அனைத்தும் தெரியும் எனப் பாசாங்கு செய்யும் தமிழ்தேசிய கட்சிகளில் உள்ள ஓரிருவர்களால் இவ்வாறான ஒற்றுமை முயற்சிகள் சிதறிச்செல்லவும் வாய்புகள் உண்டு.
கடந்த 2026 ஏப்ரல் 19 ல் தமிழ்த்தேசிய கட்சிகளை சேர்ந்த ஏழு பிரதிநிதிகளுடன் சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் இலங்கை தமிழ் அரசுக்கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானத்திடம் வடக்கு கிழக்கு பகுதிகளில் கட்சிகள் அதிகரித்துள்ளன அதனை ஓரளவு ஒழுங்குக்கு கொண்டுவாருங்கள் என தம்மிடம் கூறியதாக சி வி கே சிவஞானம் ஊடகங்களில் கூறியிருந்தார்.
இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய நகைச்சுவையாக இந்த கருத்தை நோக்கலாம் தங்களுடைய தமிழரசுக்கட்சியே இரண்டு அணியாக இரண்டு வருடங்களாக தொடர்கிறது. அதனை ஒரு அணியாக கொண்டுவர வக்கில்லாத தற்காலிக தலைவர் சி வி கே சிவஞானத்தால் வடகிழக்கில் கட்சிகள் அதிகரிப்பை தடுக்க முடியுமா? கள்ளனிடம் பொலிஸ் வேலை வழங்கிய கதை மாதிரியே இந்திய துணை ஜனாதிபதியின் இந்த ஜோக்கை பார்க்கமுடிகிறது.
தமிழ்சட்டத்தரணிகள் எடுக்கும் நல்ல முயற்சிக்கு தமிழ்தேசிய கட்சிகளில் உள்ள சட்டத்தரணிகள் குழப்பாமல் இருந்தால் மட்டுமே இந்த விடயம் வெற்றியடையும் என்பதே உண்மை!


