இலங்கை திறைசேரியின் ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஹேக்கர்களின் கைக்குச் சென்றமையானது ‘BEC’ எனப்படும் நவீன சைபர் தாக்குதல் முறையினாலேயே இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பாரிய நிதி மோசடிகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்புகள் இலங்கையில் உள்ள போதிலும், அவற்றை முறையாகப் பயன்படுத்தாததே இத்தகைய இழப்புகளுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோசடி குறித்து அவர் மேலும் விளக்குகையில்,
“தற்போது பரவலாகக் காணப்படும் ‘Business Email Compromise’ (BEC) எனும் முறையையே ஹேக்கர்கள் இங்கு பயன்படுத்தியுள்ளனர்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக விலைப்பட்டியலை அனுப்பும் போது, ஹேக்கர்கள் அந்த மின்னஞ்சல் தொடர்புகளுக்குள் ஊடுருவி, வங்கி கணக்கு விபரங்களை மாற்றி அமைப்பார்கள். இதன் மூலம் அனுப்பப்படும் பணம் உரிய நிறுவனத்திற்குச் செல்லாமல் ஹேக்கர்களின் கணக்கிற்குச் சென்றுவிடும்” என்றார்.



