ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் குடியேற்ற முகமைகளின் கூற்றுப்படி, அந்தமான் கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட சுமார் 250 ரோஹிஞ்சா மற்றும் வங்கதேச மக்கள் மாயமாகியுள்ளனர்.
அந்த இழுவைப்படகு (மீன்பிடி படகு) வங்கதேசத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்று கொண்டிருந்தது. பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் மற்றும் அதிக பயணிகள் காரணமாக படகு மூழ்கியதாக அந்த முகமைகள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 9-ஆம் திகதி படகில் இருந்த ஒன்பது பேரை தனது கப்பல்களில் ஒன்று மீட்டதாக ஏஎஃப்பி (AFP) செய்தி முகமையிடம் வங்கதேச கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இருப்பினும், படகு எப்போது கவிழ்ந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மியான்மரில் சிறுபான்மை சமூகமான ரோஹிஞ்சாக்கள், 2017-இல் நடந்த வன்முறை ஒடுக்குமுறைக்குப் பிறகு பெருமளவில் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.
வங்கதேசத்தில் உள்ள மோசமான நிலைமைகள் காரணமாக, பல ரோஹிஞ்சாக்கள் தாங்கள் பாதுகாப்பான இடமாகக் கருதும் மலேசியாவை அடைய அபாயகரமான கடல் பயணங்களை மேற்கொள்ள முயல்கின்றனர்.
தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான ரஃபிகுல் இஸ்லாம், ‘தாங்கள் மீட்கப்படுவதற்கு முன்பு சுமார் 36 மணி நேரம் கடலில் மிதந்து கொண்டிருந்ததாகக்’ கூறினார்.
40 வயதான ரஃபிகுல் இஸ்லாம், மலேசியாவில் வேலை கிடைக்கும் என்ற வாக்குறுதியே இந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தன்னைத் தூண்டியதாகக் கூறினார்.



