கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போலி வாக்குறுதிகளை வழங்கிய தேசிய மக்கள் சக்தி தற்போது உள்ளூராட்சிமன்ற தேர்தலை இலக்காக கொண்டு புதிய பொய்களுடன் மக்களை சந்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலவாக்கலையில் இன்று (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நாட்டின் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு யுகம் தற்போது உருவாகியுள்ளது.
கடந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தது. தற்போது அதே பாதையில் பயணிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலாக அரசாங்கமும் அவ்வாறான கொள்ளைகளை முன்னெடுக்கும் யுகத்தை கொண்டு செல்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வாக்குறுதியளித்த வளமான நாடு, மக்களுக்கு கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாக உள்ளூராட்சிமன்ற தேர்தலில் புதிய பொய்கள் மற்றும் புதிய வாக்குறுதிகளுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களிடம் செல்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்கட்டணம் குறைக்கப்படும் என தேர்தல் மேடைகளில் கூறியிருந்தனர்.
எனினும் தேர்தலின் பின்னர் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.



