காலநிலை மாற்றம் தொடர்பான COP27 எனப்படும் மாநாடு எதிர்வரும் மாதம் எகிப்தில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பல நாட்டு தலைவர்கள் பின்னடித்து வருகின்றனர்.
பிரித்தானியாவின் புதிய அரசர் அதில் கலந்துகொள்ளமாட்டார் என பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெரிவித்துள்ளதுடன், அவரும் கலந்துகொள்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 2050 ஆம் ஆண்டளவில் பூமி வெப்பமடையும் வாயுக்கள் வெளியேறுவதை முற்றாக தடுக்கப்போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அளித்த வாக்குறுதிகைளை பிரித்தானியா நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசயம், உலகில் மிகப்பெரும் பிளாஸ்ரிக் போத்தல்களை பயன்படுத்தும் கொக்கோ கோலா நிறுவனத்தை இந்த நிகழ்வுக்கு நிதி உதவி வழங்க எகிப்திய அரசு அழைத்துள்ளது சமூக ஆவலர்களிடம் அதிதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மசகு எண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்கள் சூழல் மாசுபடுதலில் அதிக பங்கு வகிக்கின்றன. எனவே சூழல் மாசடைவதில் அதிக பங்கு வகிக்கும் நிறுவனத்தை சூழலை பாதுகாக்கும் மாநாட்டுக்கு அழைப்பது என்பது அதன் நோக்கத்தை சிதைப்பதுடன், அதன் மீதான நம்பிக்கைகளையும் சிதறடித்துவிடும்.
உதாரணமாக தமிழகத்தில் இருந்து வெளிவந்த எந்திரன் -2 என்ற படத்தை போன்றது தான் இந்த சம்பவம். அதாவது செல்லிடதொலைபேசி நிறுவனம் ஒன்றே செல்லிடை தொலைபேசிகளில் இருந்து வெளிவரும் மைக்ரோவேவ் எனப்படும் கதிரியக்கத்தினால் சிட்டுக்குருவிகள் அழிவடைவதாக படம் எடுத்திருந்தார்கள்.
அதாவது உலகில் இடம்பெறும் அனர்த்தங்களை கூட தமது வர்த்தகத்திற்காக பயன்படுத்தும் உலகம் தான் நாம் தற்போது வாழும் உலகம் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
இந்த மாநாட்டில் பங்கெடுப்பதன் மூலம் தமது நிறுவனம் காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு முடிந்தளவுக்கு உதவிகளை வழங்கும் என கொக்கோ கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் மைக்கேல் கோற்ஸ்மன் தெரிவித்துள்ளார். ஆனால் வருடம்தோறும் 3 மில்லியன் தொன்கள் பிளாஸ்ரிக் பொருட்களை பயன்படுத்தும் இந்த நிறுவனமே சூழலை அதிகளவில் மாசுபடுத்துவதாகவும் எனவே எகிப்திய அரசு தனது முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்து 5000 செயற்பாட்டாளர்கள் கையொப்பங்களை வைத்து கடிதம் ஒன்றை எகிப்த்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
உலகில் 99 விகிதமான பிளாஸ்ரிக் பொருட்கள் மசகு எண்ணையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை தயாரிக்கப்படும்போது உருவாகும் வாயுக்கள் பூமி வெப்பமாதலில் அதிக பங்கு வகிக்கின்றன. எல்லா கண்டங்களிலும் உள்ள கடல்களையும் நிலங்களையும் மாசுபடுத்தும் பொருட்களில் பிளாஸ்ரிக் முக்கிய பங்கு வகிக்கின்றது. பிளாஸ்ரிக் பொருட்களால் உலகத்தை மாசுபடுத்தும் நிறுவனங்களில் கொக்கோ கோலா நிறுவனமே முதன்மையானது.
எனினும் தமது நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு போத்தலையும்> கான்களையும் 2030 ஆம் ஆண்டளவில் முற்றாக மீள் உருவாக்கும் திட்டத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் COP26 மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 பாகை செல்சியஸ் இற்குள் போணுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் மூலம் உலகின் வெப்பநிலை அதிகரிப்பை 2.4 பாகை செல்சியஸ் ஆக பேணமுடியும்.
வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் முதல்படியாக நிலக்கரியின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பேசப்பட்டது. பூமி வெப்பமடைதலில் முக்கிய பங்குவகிக்கும் கார்பன்டை ஒக்சைட்டு எனப்படும் வாயுவில் ஒரு வருடத்தில் 40 விகிதமானது நிலக்கரியின் பயன்பாட்டால் உருவாகின்றது. ஆனால் அதனை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் அவுஸ்திரேலியா அதனை உடனடியாக குறைப்பதற்கு முன்வரவில்லை.
செல்வந்த நாடுகள் தமது வருமானத்தை குறைக்கவிரும்வில்லை. எனினும் அதனை கணிசமான அளவு குறைக்கமுடியும் என எதிர்பார்க்கபட்டபோதும், உக்ரைன் போரை பயன்படுத்தி மேற்குலகம் ரஸ்யாவின் எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதுடன், பல ஐரோப்பிய நாடுகள் மீண்டும் நிலக்கரி மின் உற்பத்தி முறைக்கு மாறியது மிகப்பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
அதாவது போரை முதன்மைப்படுத்தும் இந்த நாடுகள் சூழலை புறக்கணித்துள்ளதானது அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாது அண்மையில் ரஸ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு எரிவாயுவை விநியோகிக்கும் Nordstream-1 மற்றும் 2 எனப்படும் இரு குழாய்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் அதில் இருந்து வெளியேறிய 300>000 தொன் எடை கொண்ட மீதேன் எனப்படும் வாயுவும் பூமி வெப்பமடைவதில் மிக முக்கிய பங்குவகிக்கும் வாயுவாகும்.
பூமி வெப்பமடைவதை தடுப்பதற்கு 2020 ஆம் ஆண்டு 100 பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஒரு றில்லியன் டொலர்களை திரட்டும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகம் தற்போது மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் அதனை எட்டமுடியுமோ என்பது சந்தேகம் தான். 2020 ஆம் ஆண்டு திர்மானிக்கப்பட்ட 100 பில்லியன் டொலர்களை வழங்க மறுத்த மேற்குலகத்தின் செல்வந்தநாடுகள் தற்போது உக்ரைன் போருக்கு 85 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதேசயம், கார்பன்டை ஒக்சைட்டு வாயுவதை அதிகம் உறிஞ்சும் மரங்களை தக்கவைக்கும் முகமாக காடுகள் அழிக்கப்படுவதை 2030 ஆம் ஆண்டளவில் முற்றாக இல்லாது செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பூமி வெப்பமடைவதால் ஏற்படும் வெப்பக்கதிர்வீச்சால் பூமியில் பல பகுதிகள் மனிதர்கள் வாழமுடியாத பிரதேசங்களாக மாற்றம் அடையலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரிவும் செஞ்சிலுவைச்சங்கமும் இணைந்து கடந்த திங்கட்கிழமை(10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறிய நாடுகள் முற்றாக பாதிப்படையும் நிலையும் எற்படலாம். எதிர்பார்க்காத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்து செல்கின்றது. இந்த அதிகரிப்பு காகெல், தெற்கு மற்றும் தென்-மேற்கு ஆசிய நாடுகளை அதிகம் பாதிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் வெப்பக்கதிர் வீச்சு 700 விகிதம் அதிகரிக்கும் சாத்தியங்கள் எற்பட்டுள்ளது. எனவே அங்கு மக்கள் வாழும் நிலை இல்லாது போகலாம். வெப்பக்கதிர்வீச்சுக்களால் 2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் 70000 அதிக இறப்புக்களும், 2010 ஆம் ஆண்டு ரஸ்யாவில் 55000 அதிக இறப்புக்களும் ஏற்பட்டிருந்தன.