விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது கட்டளைகளையே பாதுகாப்பு படைகள் செயல்படுத்தியதாக மஹிந்த கூறுகிறார்

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

இதன்படி ‘பிரித்தானிய அரசாங்கத்தினால் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்கு அப்போதைய ஜனாதிபதியான தாமே முடிவு செய்ததாகவும் அதனையே ஆயுதப் படைகள் செயல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்த கால யுத்தத்தில் 27 ஆயிரத்து 965 முப்படையினரும் காவல்துறையினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

‘இலங்கையில் யுத்தம் முடிவுக்கு 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது’. ‘இதனிடையே, பல்வேறு தரப்பினரின் துன்புறுத்தல்களிலிருந்து தமது ஆயுதப்படைகளை பாதுகாக்க பிரித்தானிய அரசாங்கம் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விசேட சட்டத்தை இயற்றியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப்படையினரை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தலுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நியாயமாக முன்நிற்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘அதேநேரம், 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்த கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பது’
‘அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்களைத் தண்டிப்பதன் மூலம் இது அவர்களுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என்பது தெளிவாகிறது’ என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.