மீனவர் விவகாரம்: ‘நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்’-அன்னலிங்கம் அன்னராசா தெரிவிப்பு

‘மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து நிரந்தர தீர்வு எட்டவேண்டும்’ என்று இலங்கை இந்திய மீனவர்கள் வலியுறுத்துவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று (26) இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக தமிழக மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவர் நேற்று (25) இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதேநேரம், வட மாகாணத்தில் உள்ள மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பேர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இந்தநிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, 2016ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறை படுத்தாமையினால் தமிழ்நாட்டிலும் வடமாகணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

எனவே கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இருநாட்டு மீனவர்களும் இன்று கலந்துரையாடியுள்ளதாகவும் இந்த கலந்துரையாடல் மூலம் இலங்கை மீனவர்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை அரசமட்ட பேச்சுவார்த்தையாக கொண்டு சென்று அதனூடாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை இரு அரசாங்கங்களுக்கும் வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்