01. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் எவ்வாறு நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்
கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘தற்போதைய தேர்தல் முறைமைக்கு அமைய கட்சிகள் தனித்து போட்டியிடுவதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களை கைப்பற்ற முடியும்’ என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘நாட்டை அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய போதிலும் உள்ளுராட்சி மன்றங்களை அவ்வாறு வழங்க வேண்டிய தேவையில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தேர்தலுக்கு பின்னர் எவ்வாறு நிர்வாகத்தை பகிர்வது என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழரசு கட்சி தீர்மானித்து அந்த பணிகளை முன்னெடுத்துள்ளது’.
அதேபோன்று தொகுதி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய தமிழ் கட்சி என்ற அடிப்படையில் தங்களுக்கு அந்த பொறுப்பு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.



