உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டுப்பணங்களை மீள செலுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘கட்டுப்பணத்தை வைப்புச் செய்தமைக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களை அந்த நபர்கள் சமர்ப்பித்தால், அவர்களுக்கு அந்த பணம் மீளளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘பணத்தை வைப்புச் செய்த பற்றுச் சீட்டின் மூலப்பிரதி, வைப்புப் பணத்தை மீள பெறுவதற்கான விண்ணப்பக் கடிதம் ஆகியவற்றை கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பாராளுமன்றில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ‘ஒவ்வொரு மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்’ என்று அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 27 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 274 பிரதேசிய சபைகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.