மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வு பணிகள் தடுக்கப்பட்டன

23 அரச நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் மன்னாரில் இன்று (19) முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து குறித்த செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்தநிலையில் மீண்டும் அவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு 10 பேருக்கு தடை விதித்து மன்னார் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிப்பட்டிருந்தது. எனினும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்கள் பாதிப்படைவதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் எடுத்துரைக்கப்பட்டன.

இந்தநிலையில் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு கனிய மணல் ஆய்வு பணிகள் இன்று (19) முன்னெடுக்கப்படவிருந்த போதிலும், பாராளுமன்றில் இருந்து கிடைக்கப்பட்ட அறிவுறுத்தல் ஒன்றுக்கு அமைய, அந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று காலை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

‘கனிய மணல் ஆய்வு பணிகள் காரணமாக பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது’ என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, ‘ஏற்கனவே மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே, இந்த பணிகள் இடம்பெறுகின்றன’ என்று தெரிவித்தார். அத்துடன் ‘ஆய்வு பணிகளில் ஈடுபடுகின்ற தரப்பினருக்கு கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஆவணங்கள் காணப்படுகின்றன’ என்றும் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

‘எவ்வாறாயினும் அவ்வாறான ஆவணங்கள், சட்ட ரீதியாக வழங்கப்பட்டனவா? அல்லது சட்டத்துக்கு புறம்பாக வழங்கப்பட்டனவா? என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும்’என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்துடன் தொடர்புடைய பிரதி அமைச்சருக்கு அறிவுறுத்துவதாகவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். அதேநேரம், ‘அங்குள்ள மக்களினது மனநிலை மற்றும் சுற்று சூழலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்பன தொடர்பில் கவனத்திற் கொண்டே அரசாங்கம் தமது பணிகளை முன்னெடுக்கும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னாரில் அவ்வாறான கனிய மணல் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாதிருப்பதற்கே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த பின்னணியில் பாராளுமன்றில் இருந்து கிடைத்த அறிவுறுத்தலுக்கு அமைய, மன்னாரில் இன்று (19) முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.