பிரித்தானிய தூதுவருடன் 1 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திய எம்.ஏ.சுமந்திரன்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆண்ட்ரூ பெற்றிரிக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய தூதுவரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது நாட்டின் சமகால அரசியல் நிலவரம், அரசாங்கத்தின் நடவடிக்கைகள், தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், புதிய அரிசியலமைப்பு உருவாக்க முயற்சிகள், வரவு – செலவுத் திட்ட யோசனைகளின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கின்றது. அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஜெனிவா அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்குபற்றி உரையாற்றவிருக்கின்றார். ‘அந்த உரையின் பின்னர் இலங்கை விடயத்தை ஜெனிவாவில் கையாளும் முறைமை குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியும்’ என்று பிரித்தானிய தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.