புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்குள் இன்று (19) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் உயிரிழந்தார். வழக்கு விசாரணைகளுக்காக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கு அவர் அழைத்து வரப்பட்ட போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது இதில் பலத்த காயமடைந்த ‘கனேமுல்ல சஞ்சீவ’ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சட்டத்தரணி போன்று வேடமிட்டிருந்த ஒருவர் இவ்வாறு நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்.
பின்னர் குறித்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பி சென்றவுடன் தாக்குதலுக்காக அவர் பயன்படுத்திய துப்பாக்கி நீதிமன்றத்திற்குள் இருந்து மீட்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய நீதிமன்றத்துக்குள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபருக்கு பெண் ஒருவரே துப்பாக்கியை கொண்டு சென்று கொடுத்துள்ளமை தெரியவந்தது.
குறித்த பெண் புத்தகம் ஒன்றுக்குள் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபர் ஏற்கனவே இடம்பெற்ற ஐந்து கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை மித்தெனிய பகுதியில் நேற்றிரவு (18) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 39 வயதான குறித்த நபரும் அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்



