82 நாடுகளில் பரவிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ்- WHO

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளன என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்புக்கள் 103,945,393 ஆக அதிகரித்துள்ள நிலையில், 2,248,089 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரித்தானியாவில்   கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது.  இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  இந்தியா உள்பட பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ்    கூறுகையில், “ பிரித்தானியாவில்   முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன.  இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளன” என்றார்.