மியான்மரில் இராணுவ ஆட்சி – ஐ.நா கண்டனம்

மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது அந்நாட்டு இராணுவம்.

இதையடுத்து ஆங் சான் சூச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தங்கள் கட்டுப்பாடுக்குள் அரசு வந்துள்ளதாக மியான்மர் இராணுவம்  அறிவித்துள்ளது.

இந்நிலையில், இராணுவத்தின் இந் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர்  அன்டோனியோ குட்டரெஸ் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,

 “சான் சூச்சி, ஜனாதிபதி யு வின் மைன்ட் மற்றும் பிற அரசியல் தலைவர்களைத் தடுத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இராணுவத்தின் இந்த நடவடிக்கையால் மியான்மரின் ஜனநாயக சீர்திருத்தங்கள் அடிபட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.