7 பேர் விடுதலை குறித்து 2 வாரத்தில் பதில் உயர் நீதிமன்றில் தமிழக அரசு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு 2 வாரத்தில் பதில் தருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், றொபேட், ஜெயக்குமார், ரவிச்சந்திரன்  ஆகிய 7பேரும் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து, இத்தீர்மானத்தை ரத்துச் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வேளையில், தங்களை முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி றொபேட், ஜெயக்குமார் ஆகியோர் 2012 தொடர்ந்த வழக்குகள் நீதிபதிகள் M.M.நற்தரேஷ், M.நிர்மல்குமார் அவர்கள் முன் விசாரணைக்கு வந்த போது, அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்களின் (7பேரின்) வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அதன் தற்போதைய நிலை பற்றி பதில் தெரிவிக்க தமக்கு 2வார கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை 2 வாரம் ஒத்தி வைத்தார். இதற்கிடையில் 7பேரின் விடுதலை தொடர்பாக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி நளினி தொடர்ந்த வழக்கில்  பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் கோரியதையடுத்து, அந்த வழக்கை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் கொண்ட குழுவினர் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.