அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த 20-ம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் 78 முக்கிய கொள்கை முடிவுகளை அறிவித்தார். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களில் குற்ற பின்னணி உடையவர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக மெக்ஸிகோ நாட்டினர் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 28 இலட்சம் பேரும், சீனாவை சேர்ந்த 22 இலட்சம் பேரும், பிலிப்பைன்ஸை சேர்ந்த 14 இலட்சம் பேரும், எல் சல்வடாரை சேர்ந்த 14 இலட்சம் பேரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.
முதல்கட்டமாக 15 இலட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உடனடியாக அவரவர் நாடுகளுக்கு கடத்தப்படுவார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர். அவர்களை திரும்ப அழைத்து கொள்ள இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.