53 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதாக அறிவிப்பு

இந்தோனேசிய(Indonesia) கடற்படையை சேர்ந்த கேஆர்ஐ நாங்கலா 402 என்கிற நீர் மூழ்கிக் கப்பல், கடந்த புதன் கிழமை 53 வீரர்களுடன் காணாமல் போய்விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் காணாமல் போன நிலையில்,  அது நீரில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்த 53 மாலுமிகளும்  உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

“நீர்மூழ்கி கப்பலின் கடைசி இருப்பிடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒரு பெரிய அழுத்தமில்லாமல் சாதாரணமாக வெளிவரக்கூடிய பொருட்கள் அல்ல,” என இந்தோனேசிய ஏர் மார்ஷல் Hadi Tjahjanto தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தோனேசிய கடற்படை தளபதி யூடோ மார்கோனோ பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் ‘‘நீர்மூழ்கி கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் உண்மையான ஆதாரங்கள் மூலம், மாயமான நீர்மூழ்கி கப்பல் என்ற கட்டத்தில் இருந்து கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் என்ற கட்டத்துக்கு நாங்கள் சென்று விட்டோம். கப்பலில் 53 பணியாளர்களுக்கான ஆக்சிஜன் சப்ளை இன்று அதிகாலையுடன் முடிந்து விட்டதால், யாரும் உயிர் பிழைத்து இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை’’ என்றார்.