மன்னாரில் 500 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி- அதானி குழுமத்துக்கு

347 Views

மன்னாரில் 500 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி

இலங்கையின் நிதி அமைச்சர் பஷில் ராஜபசவின் இந்திய  பயணத்திற்கு முன்னர் இலங்கை இந்திய பொருளாதார மற்றும் வர்த்தகம் சார்ந்த முக்கிய உடன்படிக்கைகள் சிலவற்றை கைச்சாத்திடவுள்ளதாகவும், மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சிலவற்றை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில், மன்னாரில் 500 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிசக்தி துறையை மேம்படுத்துவதற்காக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதில் தற்போதைய அரசாங்கத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

50 மெகாவோட்களுக்கு மேல் உற்பத்தி செய்யக்கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், மிதக்கும் மற்றும் கடலோர காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து திறந்த விலைமனுக்களை கோரியுள்ளதாகவும் மேலும் பல நிறுவனங்களும் அனல் மின் நிலையங்களை நிறுவ அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு 400க்கும் மேற்பட்ட விலைமனுக் கோரிக்கைகள் வந்ததாகவும், நில இருப்பின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அதானி குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், இலங்கை மின்சார சபையினால் மட்டுமே கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னர் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களும் பல சந்தர்ப்பங்களில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறான ஒப்பந்தமே லங்கா ஐஓசி நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு வழிகோலியது எனறார்.

Tamil News

Leave a Reply