500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்

அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக இந்த கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்ட கொள்கையின் கீழ் உலக வங்கியின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த மே மாதம் 17ஆம் திகதி இடம்பெற்றது.

குறித்த வேலைத்திட்டத் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இரு கட்டங்களாக வழங்கப்படவுள்ள இந்த கடனுதவியில் முதல்கட்டமாக 371.2 மில்லியன் டொலர் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இந்தக் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி, இலங்கை மத்திய வங்கியின் இணக்கப்பாடும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்துடன் ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.