துறைமுக நகரத்திற்கு புதிதாக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு

கொழும்பு துறைமுக நகரத்தில் சைனா ஹார்பர் இஞ்ஜினியரிங் நிறுவனம், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்சானுடன் பீய்ஜிங்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போதே இந்த முதலீடு குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான முக்கிய கடன் வழங்குநரான சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி, கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வு-பலினுடன் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இலங்கையின் பேச்சுவார்த்தையாளர்களுடன் ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாகவும், பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும் சீன வங்கி உறுதியளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார்.