50ஆண்டுகள் இல்லாத அளவு உணவு பஞ்சத்தில் உலகம் ஐ.நா. எச்சரிக்கை

50 ஆண்டுகள் இல்லாத அளவு உணவு நெருக்கடியை உலகம் சந்திக்கவுள்ளதாகவும், கொரோனா நெருக்கடியால் இந்நிலை ஏற்படவுள்ளதாகவும், உலக அரசுகள் இதைத் தவிர்க்க விரைவாக செயற்பட வேண்டும் எனவும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் வாடும் அபாயம் உள்ளது. ஆனால் நீண்டகால விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். ஏனெனில், குழந்தைப் பருவத்தில் மோசமான ஊட்டச்சத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தை ஐந்து வயதிற்குள் அவர்களின் வளர்ச்சியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. மேலும் வறுமை விகிதங்கள் உணர்ந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் இதே கதியை சந்திக்க நேரிடும்.

ஏழை மக்களுக்கு உடனடியாக சமூக பாதுகாப்பு அளிப்பது அவசியம். கொரோனா தொற்று பாதிப்பால் நிலவும் மந்த நிலை அவர்களுக்கு அடிப்படை ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வழிவகுக்கும். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் வரவிருக்கும் உலகளாவிய உணவு அவசர நிலை, மில்லியன் கணக்கில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமென்பது தெளிவாகத் தெரிகிறது. கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க நாம் இப்போதே செயற்பட வேண்டும். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.