ஐ.நா தீர்மானம் வெற்றி பெற்றவர்கள் யார்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஏழாவது தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் என்பது தமிழ் அமைப்புக்களின் அல்லது அரசியல் கட்சிகளின் உழைப்பினால் கொண்டுவரப்பட்டது அல்ல. இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள அரசியல் நெருக்கடியின் எதிர்விளைவு இது. நாம் முயன்றாலும், இல்லை என்றாலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கும்.

ஏனெனில் இந்த தீர்மானத்தில் தமிழ் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் முன்வைத்த எந்த கோரிக்கைகளும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மாறாக மேற்குலகத்தின் அழுத்தம் இந்தியாவின் அரசியல் தீர்வு என்பவற்றை உள்ளடக்கியதாகவே இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் என்பது சிறீலங்காவில் உள்நுழைவதற்கான பாதை ஒன்றை மேற்குலகத்திற்கு திறந்து விட்டுள்ளது. அதாவது சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்க அல்லது சாட்சியங்களை பாதுகாக்க ஐ.நா சிறீலங்காவிற்குள் நுழைய முடியும்.

மாறாக இணைக்குழு நாடுகளான பிரித்தானியாவோ, கனடாவோ அல்லது ஜேர்மனியோ அங்கு சாட்சியங்களை சேகரிப்பது என்ற போர்வையில் செல்லமுடியுமா என்பதே தற்போது சிறீலங்காவை அச்சுறுத்தும் கேள்வியாகும். அவ்வாறு நிகழுமானால் அது சிறீலங்கா இதுவரை கட்டிக்காத்த இறைமை என்ற பதத்தை உடைத்துவிடும் என்பதே சிறீலங்கா அரசுக்கு முன்னுள்ள பாரிய நெருக்கடி.

அதேசமயம், இவ்வாறான ஒரு நிலை உருவாகுவதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஸ்யா போன்ற நாடுகள் அனுமதிக்குமா என்பதே தற்போதைய கேள்வி. ஏனெனில் சிறீலங்காவில் ஆரம்பமாகும் இந்த அவதானிப்பு தங்கள் நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் தொடரலாம் என்பதே இந்த நாடுகளின் அச்சம்.

உதாரணமாக காஸ்மீர் பிரச்சனை தொடர்பில் இந்தியா அச்சமடைகின்றது. அது தொடர்பில் ஐ.நா கவலை வெளியிட்டு வந்ததும், அமெரிக்காவின் புதிய அரச தலைவர் தனது நிலையை மாற்றாததும் நாம் அறிந்ததே.

எனவே தான் தமிழ் மக்களின் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்க முற்பட்டு நிற்கின்றது இந்தியா. சிறீலங்காவில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினை தான் பின்னர் மனித உரிமை விவகாரமாக மாற்றம் பெற்றது. எனவே அரசியல் தீர்வும், சுயாட்சியும் தான் தமிழ் மக்களின் இறுதி இலக்கு. அதனை நாம் அறிவோம்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், இதனை மனித உரிமை பிரச்சினையாக மாற்றி தனது பிராந்தியத்தில் மேற்குலகத்தின் தலையீடுகளை விரும்பவில்லை, எனவே தான் 13 ஆவது திருத்தச்சட்டம், அரசியல் தீர்வு போன்ற பதங்களும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணசபை என்ற பதமும் இந்த தீர்மானத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

alaina disap ஐ.நா தீர்மானம் வெற்றி பெற்றவர்கள் யார்? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலம்சென்ற இந்திரா காந்தி அம்மையாரின் காலத்திலும் அவர் போராளி இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்து அரசியல் பிரச்சினைக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இனக்கலவரங்களில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்ட பிராந்திய வல்லரசு அன்றும் விரும்பவில்லை.

அதாவது இந்த தீர்மானத்தில் இந்தியாவும், மேற்குலகமும் தமக்கான நன்மைகளை தேடிக்கொண்டுள்ளன. அதேசமயம் அதில் தொடர்புடைய சிறீலங்கா மற்றும் தமிழர்களின் நிலை என்ன?

சிறீலங்கா அரசும் தீர்மானம் வெற்றி என கூறுவதுடன் அதனை நிராகரித்தும் உள்ளது.

அது வெற்றி என கூறுவதற்கான காரணம், தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய 40 நாடுகளில் ஒரு ஆசிய நாடும் இல்லை என்பதுடன், இந்தியாவும் அதனை ஆதரிக்கவில்லை என்பது தான். அதனை தான் சிறீலங்காவின் அமைச்சர் ஜி.எல். பிரீஸ் தெரிவித்திருந்தார். ஆசிய நாடுகளின் இந்த ஒற்றுமை என்பது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அல்லது மேற்குலகத்தின் நகர்வுகளை கட்டுப்படுத்தும் தகமை கொண்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே தான் சிறீலங்கா நிம்மதி கொண்டுள்ளது.

ஆசியா நாடுகளின் இந்த முடிவு தமிழ் மக்கள் சந்தித்த மிகப்பெரும் தோல்வியாகும், தமிழ் இனம் தன்னை சூழவுள்ள பிராந்தியத்தில் தனக்கான நண்பர்களை தேடிக்கொள்வதில் தவறிழைத்துள்ளதையே இது காட்டுகின்றது. இந்த பின்னடைவு என்பது அவர்களுக்கான சுயாட்சி மற்றும் இறைமை தொடர்பில் அதிக பாதிப்புக்களை வருங்காலத்தில் ஏற்படுத்தும்.

போர் உக்கிரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் அதனை நிறுத்துமாறு கோரி பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கு முன் இலட்சக் கணக்கில் தமிழ் மக்கள் போராடிய போதும், அவர்களை அழைத்து பிரித்தானியா தெரிவித்த கருத்து என்பது இங்கு போராடுவதில் அர்த்தமில்லை, உங்கள் பிராந்தியத்தில் உள்ள பிராந்திய வல்லரசுகளை மீறி எம்மால் ஒன்றும் செய்ய முடியாது எனவே அவர்களுடன் பேசுங்கள் என்பதேயாகும்.

uk rep ஐ.நா தீர்மானம் வெற்றி பெற்றவர்கள் யார்? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

அதேபோலவே போரின் இறுதி நாட்களில் கொழும்புக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களான டேவிட் மில்லிபான்ட மற்றும் பேர்னாட் குச்சுனர் ஆகியோரால் கூட போரை நிறுத்த முடியவில்லை.

அதாவது தமிழ் இனத்தை பொறுத்தவரையில் மேற்குலகம், இந்தியா என்ற அதன் இறுக்கமான பார்வையை சற்று தளர்த்தி உலக நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை நோக்கி தமது நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

திறக்காத கதவை தொடர்ந்து தட்டுவதில் பயனில்லை என்பதை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த தீர்மானத்தில் பல தரப்பும் தமக்கான அனுகூலங்களை கண்டறிந்துள்ளன. அப்படியானால் தமிழ் இனம் இதனை பயன்படுத்தி நன்மைகளை பெறமுடியுமா?

தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சியங்களை சேகரித்தல், ஆவணப்படுத்துதல், அரசியல் தீர்வு, இராணுவமயமாக்கல், சிறுபான்மை இனங்கள் மீதான அச்சுறுத்தல்கள் போன்ற விடயங்களை தொளிவாக ஆய்வு செய்து அதனை வலுப்படுத்தி அதனை பலப்படுத்துவது தொடர்பில் நாம் சிந்திக்க முடியும்.

gota park ஐ.நா தீர்மானம் வெற்றி பெற்றவர்கள் யார்? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தற்போது திறந்துள்ள இந்த பாதைகளை வலுப்படுத்த வேண்டுமானால், தமிழ் இனம் ஒரு அணியில் இணைய வேண்டும் என்பதுடன், தமிழர் தாயகம் அமைந்துள்ள பிராந்தியத்தில் உள்ள பிராந்திய வல்லரசுகள் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடுகளுடன் தமது உறவுகளை தமிழர் தரப்பு வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் தற்போது திறந்துள்ள இந்த கதவுகளும், மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் தேவைகள் தீர்ந்ததும் மீண்டும் இறுக்கமாக மூடப்படும் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக.