46,000 ஆண்டுகால பழமை வாய்ந்த பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய சின்னங்கள் தகர்ப்பு

அவுஸ்ரேலியாவில் 46,000 ஆண்டுகால பழமை வாய்ந்த பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய சின்னமான 2 பாறைக்குகைகளை சுரங்க கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று வெடிவைத்துத் தகர்க்க அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவுஸ்ரேலிய பூர்வக்குடி விவகார அமைச்சர் கென் வியாட் ஏபிசி வானொலியில் கூறும்போது, பூர்வக்குடியினரின் பாரம்பரிய சின்னங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது, மேலும் இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை..

வெடி வைத்து தகர்த்த சுரங்க கார்ப்பரேட்டான ரியோ டின்ட்டோ நிறுவனம் ‘தவறு நிகழ்ந்து விட்டது’ என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

பூட்டி குர்ரம் என்ற பழங்குடியினர் சமூகம் புனிதமாகக் கருதும் ஜூகன் கோர்கே அருகே 2 சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து பாறைக்குகைகளை தகர்த்தெறிந்துள்ளனர். இந்தப் பூர்வக்குடியினர் வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் பில்பாரா பகுதியில் வசித்து வருகின்றனர்.

2013-ம் ஆண்டு சுரங்க கார்ப்பரேட்டுக்கு இதனை வெடிவைத்துத் தகர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஓராண்டுக்குப் பிறகு மிக முக்கியமான தொல்லியல் கண்டுப்பிடிப்புகள் இங்கு நிகழ்த்தப்பட்டன.

அதாவது ஆஸ்திரேலியாவின் மிகவும் தொலைதூர மனித வாடையற்ற பகுதியில் ஒரு பண்டைய புகலிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதாவது கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கான ஆதார குகைகளாகும் இவை.

இதில் வேடிக்கை என்னவெனில் பூர்வக்குடியினர் தங்கள் பூர்வக்குடி வரலாறு மற்றும் பாரம்பரிய விழாக்களை ஜூலையில் நடத்த சுரங்க கார்ப்பரேட் ரியோ டின்ட்டோவிடம் பூர்வக்குடியினர் அனுமதி கேட்டபோதுதான் குகைகள் தகர்க்கப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் இவர்களுக்கு தெரியவந்தது.

பூர்வக்குடியினரின் பாரம்பரியம் வரலாற்றுச் சின்னங்கள் இங்கு அழிக்கப்படுவது முதல் முறையல. வரலாற்று காலத்துக்கு முந்தைய குகை ஓவியங்கள் புரப் பெனின்சுலாவில் இதற்கு முன்னர் அழிக்கப்பட்டன.

ஜூகான் குகைகள் தகர்க்கப்பட்ட நாளை வரலாற்றின் கருப்பு நாள் என்று யுனெஸ்கோ வர்ணித்துள்ளது. மேலும் இந்தத் தகர்ப்பை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சமீபகாலங்களாக காலி செய்த சிலபல பண்டைய கலைப்பொருட்களின் சேதத்துடன் ஒப்பிட்டுள்ளது யுனெஸ்கோ