ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதுடன், அடிக்கடி பொது இடங்களில் குண்டு வெடிப்புக்கள் உட்பட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகியும் உள்ளனர். அத்துடன் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியை தலிபான்களே ஆட்சி செய்தும் வருகின்றனர்.
ஆப்கான் அரசிற்கும் தலிபான்களுக்கும் இடையில் நடைபெறும் போரில் பொது மக்கள் பலியாவது உண்டு. ஆப்கான் அரசுடன் அமெரிக்க அரசும் இணைந்து தலிபான்களை ஒழிக்க முயன்று வருகின்றது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் சிறையிலிருந்து 400 தலிபான் கைதிகளை ஆப்கான் அரசு இப்போது விடுதலை செய்துள்ளது. இது குறித்து ஆப்கான் பிரதமர் அஷ்ரப் கனி கூறும் போது, “தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள குடிமக்கள் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்த மக்களையும் அதிகளவில் தாக்கிக் கொன்றுள்ளனர். இது மிகவும் ஆபத்தான விடயம். விரைவில் தலிபான்களுடன் ஆப்கான் அரசு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. சமாதான உடன்படிக்கையை எட்ட ஆப்கான் அரசு ஆவன செய்யும்” என்று கூறினார்.
ஆப்கான் தேசிய பாதுகாப்புச் சபை செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், “நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே தீவிரவாத்தை ஒடுக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும். எனவே, பயங்கரவாத தலைவர்களுடன் அரசு நேரடியாக சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். தற்போது, 400 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதால், தலிபான்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்தாமல் சமாதானமாகச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தான் அரசு இவர்களை விடுவித்துள்ளது” எனக் கூறினார்.
ஆப்கான் அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.