சர்வதேசத்துக்கு அடிபணிந்து செயற்படுவதற்குத் தயாராகவில்லை: வெளிவிவகார அமைச்சர் தினேஷ்

பெரும்பான்மைப் பலத்துடன் – வரலாற்று வெற்றியுடன் புதிய அரசு ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இந்த அரசு அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் நேசக்கரம் நீட்டுகின்றது. ஆனால், எந்தவொரு நாடுகளிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிந்து செயற்படத் தயாரில்லை என புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“தமிழ் மக்கள் புதிய அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. எனவே, தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கி எமது பயணத்தைத் தொடர்வோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்முடன் விதண்டாவாதம் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது. கூட்டமைப்பினரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்துள்ளார்கள். எனவே, கூட்டமைப்பினரின் கருத்துக்களைக் கேட்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

நாம் தமிழ் மக்களின் கருத்துக்களையே கேட்போம் இந்தப் புதிய அரசில் இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் எந்தத் தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என்றார்.