ஈரானில் கடந்த ஆறு மாதங்களில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ள வேகம் கடந்த 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மிகமிக அதிகம் என்று நார்வேயை மையமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (IHR) எச்சரித்துள்ளது.

மாஷா அமினி மரணமும் மரண தண்டனைகளும்: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்தில் ஈடுபடுவர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் திகதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.

இதனைக் கண்டித்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களை ஒடுக்க, போராட்டக்காரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மரண தண்டனைகளை ஈரான் அரசு அதிகரித்துள்ளதாக நார்வேயை மையமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

அதேபோல் பாரசீகர்கள் அல்லாத இனக் குழுவினரே மரண தண்டனைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 6 மாதங்களில் மரண தண்டனைக்குள்ளான 354 பேரில் 20 சதவீதம் பேர் சன்னி பாலுச் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது அதனை உறுதி செய்துளது.