பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் சின்னையா சிவரூபன் சாட்சியங்களை பதிவு செய்ய தவணை

கிளநொச்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபன் தொடர்பான வழக்கின் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு எதிர்வரும் டிசப்ரம்பர் மாதம் 04ம்  05ம் திகதிகளுக்கு தவணையிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த 18.08.2019 அன்று கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம்  09ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபன் தொடர்பான வழக்கு புதன்கிழமை (05-06-2023) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ. சகாப்தீன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

வைத்தியர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதி அமைச்சினுடைய சட்ட ஆலோசகருமான யூ.ஆர்.டி. சில்வா முன்னிலையாகியிருந்தார். இதன் போது  இராணுவ அதிகாரியான சாட்சியின் வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக இன்று எடுத்துக் கொள்ள ப்பட்டபோது சாட்சி சமூகமளிக்காத நிலையில் எதிர்வரும் செப்ரம்பர் 04ம் 05ம் திகதிகள்  விளக்கத்திற்காக தவணையிடப்பட்டுள்ளது.

பளை கரந்தாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடி மருந்துடன் தொடர்பு எனவும் தாளையடி கடற் பரப்பில் பாறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பொதியுடன் தொடர்பு மற்றும் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் செய்ய முற்பட்டதாக தெரிவித்து, குறித்த வைத்தியர் 18.08.2019 அன்று இரவு ஆனையிறவு பகுதியில் வைத்து இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.