30 வருடங்களின் பின்னர் நடைபெற்ற தேர்த் திருவிழா

காங்கேசன்துறை, மாம்பிராய் ஞானவைரவர் ஆலயத் தேர்த் திருவிழா கடந்த 30 வருடங்களின் பின்னர் கோலாகலமாக நடைபெற்றது.

1990 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 வருடங்கள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த கோயில் அமைந்துள்ள பகுதி காணப்பட்டது.

2018ஆம் ஆண்டு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இப்பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது. இதன் போது மாம்பிராய் ஞானவைரவர் ஆலயம் இடித்து அழிக்கப்பட்டிருந்தது. அழிக்கப்பட்ட ஆலயத்தை அப்பகுதி மக்கள் தமது சொந்த முயற்சியில், புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களது நிதிப் பங்களிப்பில் புதுப்பொலிவுடன் கட்டி முடித்தனர்.

தேரில் மாம்பிராய் ஞானவைரவர் ஏறி வலம் வந்த காட்சி மக்களின் கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைக்க, அரோகரா கோஷத்துடன் தேர்த்திருவிழா இனிதே நடைபெற்றது.