திருமலையில் எண்மர் சுட்டுக்கொலை – பொலிஸார் ஐவருக்கு ஆயுள்தண்டனை

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டிய உத்தரவிட்டார்.

கந்தளாய், பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிராயுதபாணிகளான 8 தமிழர்கள் பாரதிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆயுதம் தாங்கிய குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்த கொடூரத்தை பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டு, குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கே மேற்படி ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ரணராஜ பண்டார, உப பொலிஸ் பரிசோதகர் ஜி.எல்.சோமரத்ன, பொலிஸ் சார்ஜன்ட்களான சந்திரரத்ன பண்டார, கே.எம். நிஹால் பிரேமதிலக்க, ஏ.ஆர்.சோமரத்ன பண்டார ஆகியோருக்கே ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கந்தளாய் பாரதிபுரத்தில் இக்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக சட்டமா அதிபரினால் அவசரகால உத்தரவு வழக்குகள் நடைமுறைகள் சட்டத்தின் 26 (1) பிரிவின் பிரகாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.