20வது திருத்தம் –  பெரும்பான்மையைப் பெற அரசாங்கம் இரகிய முயற்சி

நாடாளுமன்றத்தில் 20வது திருத்த சட்டத்திற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஆளும்  அரசாங்கம் வெளிப்படையான மற்றும் இரகசிய முயற்சிகளில் இறங்கியுள்ளது.

அரசாங்கத்திற்கு தற்போது 149பேரின் ஆதரவுள்ளது. சபாநாயகரின் வாக்குடன் அரசாங்கத்துக்கு 150 பேரின் ஆதரவு கிடைக்கும் அது போதுமானது என்றாலும் கட்சியின் தலைவர்கள் பதட்டமான நிலையை விரும்பவில்லை.

மேலும் அரசாங்கத்தின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்திற்கு ஆதரவை வெளியிட்டுள்ள போதிலும்  நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க  போன்ற சிலர் 20வது திருத்தத்தினை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

“இது எனது தனிப்பட்ட கருத்து, உண்மையில் எங்களுக்கு 20ஆவது திருத்தம் அவசியமில்லை”  உண்மையில் எங்களுக்கு புதிய அரசமைப்பே அவசியம். ஒட்டுப்போடும் வேலைகள் தேவையில்லை” என அவர் சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

அதே போல், முன்னாள் பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்கவின் மகனான விதுரவிக்கிரமநாயக்க கூறுகையில், “20வது திருத்தம் தற்போதுதான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, அதனை உச்சநீதிமன்றம் ஆராய்ந்து வருகின்றது, நான் இன்னமும் அதனை ஆராயவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே வாக்களிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்போம்.

புதிய அரசமைப்பு அரசாங்கமொன்றில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை தெளிவாக வரையறுக்கவேண்டும்.  புதிய அரசமைப்பு மக்களின் உரிமைகளை மக்களை பாதுகாக்கவேண்டும். போக்குவரத்து சுகாதாரம் கல்வி தொடர்பான தேசிய கொள்கை புதிய அரசமைப்பில் இடம்பெறவேண்டும். ” என்றார்.

இதுதவிர  இன்றும் சிலருக்கும் 20வது திருத்தம் குறித்து தயக்கம்  இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கசெய்வதற்கான திரைமறைவு முயற்சிகளும் இடம்பெறுவதாகவும் இதற்கான முக்கிய முயற்சிகளை பசில் ராஜபக்ச முன்னெடுத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் 20வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த அமைச்சு பதவியும் வழங்கப்படாது என்பதில் பசில் ராஜபக்ச உறுதியாக காணப்படுகின்றார்.

இரண்டு சிறிய கட்சிகளை சேர்ந்த ஆறுபேர் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என தெரியவருகின்றது.