20வது திருத்தத்திற்கு எதிராக அனைவரும் வாக்களிக்க வேண்டும் -எம்.கே.சுமந்திரன்

20வது திருத்த சட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் எதிராக வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் 20வது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் பிரதம கருத்துரையாளராக கலந்துகொண்டார்.

IMG 1670 20வது திருத்தத்திற்கு எதிராக அனைவரும் வாக்களிக்க வேண்டும் -எம்.கே.சுமந்திரன்

மேலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இனங்களிடையே சமூக ஒப்பந்தம் ஒன்று இல்லாதவரைக்கும் இந்த நாட்டிலே இனப்பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும் என இங்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது ஒரு சட்டம் அல்ல. அதில் ஒரு சட்ட விடயங்கள் இருக்கலாம். ஆனல் அது ஒரு ஒப்பந்தம். ஒரு நாட்டின் மக்களிடையே இருக்கின்ற,அவர்கள் தங்களிடையே ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு ஒப்பந்தம். இதனை சமூக உடன்படிக்கையென்றும் சொல்வார்கள்.

முடியாட்சி முடிந்து மக்கள் ஆட்சி ஆரம்பிக்கும் காலத்தில்தான் இவ்வாறு அரசியலமைப்பு மூலமாக எவ்வாறு இந்த நாட்டின் ஆட்சி இருக்கப்போகின்றது என்பதை வரையறுத்து கூறுகின்றது.வௌ;வாறான ஆட்சிமுறைகள் இருந்தாலும் குடியாட்சி முறைகளுக்கு அடித்தளமான விடயங்கள் ஒன்றாக காணப்படுகின்றன.

தேர்தல் காலத்தில் சிறுபான்மை மக்களில் தங்கியிருந்தாலும் தேர்தல் முடிந்தவுடன் பெரும்பான்மையினத்துக்கு சார்பாகத்தான் இயங்குவார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியை தவிர மற்றைய அனைத்து கட்சிகளும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை எதிர்த்தன. அதனை நாங்கள் இல்லாமல் செய்வோம் என்று சொல்லியிருந்தார்கள்.

1994ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா போட்டியிட்டிருந்த போது இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நான் ஒழிப்பேன் என்று வாக்குறுதி வழங்கி ஜனாதிபதியானார். 1996ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார முறைமையை கொண்டுவந்த ஐக்கிய தேசிய கட்சியை அதனை ஒழிக்கவேண்டும் என்று தீர்மானத்தினை நிறைவேற்றியது. இன்றுவரைக்கும் அவர்களின் கட்சியின் கொள்கைகளுல் ஒன்றாக அது உள்ளது.

அதன் பின்னர் அனைத்து கட்சிகளும் நிறைவேற்று அதிகாரமுறை ஒழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடன்தான் இருந்தன. ஆனால் இன்றுவரைக்கும் அது நடக்கவில்லை. மாறிமாறிவந்த ஜனாதிபதிகள் இதனை வைத்தே வாக்கு கேட்டார்கள். ஆனால் செய்யவில்லை.

ஆனால் 2000ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தார்கள். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வும் அதில் இருந்தது. 13வது திருத்த சட்டம் கொண்டுவந்தபோது தமிழ் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது என இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். 1987ஆம் ஆண்டு ஜேர் ஜயவர்த்தன டெல்லிக்கு அழைக்கப்பட்டு அதில் மாற்றங்களை செய்யவேண்டும் என கோரப்பட்டது.இது மிகவும் முக்கியமானது.

இன்று இருக்கின்ற மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு கொடுப்பதாக இருந்தால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களுக்குத்தான் கொடுக்கப்படவேண்டும்.அந்த அரச அதிகாரங்கள் மக்களின் கைகளிலேயே வழங்கப்படவேண்டும்.

ஆனால் தற்போது 13வது திருத்தில் இருக்கின்ற முறைமை எப்படியென்றால் நீதித்துறை பகிரப்படவில்லை, மத்தியில்தான் இருக்கின்றது. சட்டவாக்கல் அதிகாரம் மாகாணசபைக்கு இருந்தாலும் ஒரு சட்டத்தினை இயற்றுக்கின்றபோது ஆளுனர் அனுமதியளிக்கவேண்டும்.இறுதி அதிகாரம் ஆளுனரிடமே இருக்கின்றது.அதேபோன்று மத்தியில் இருக்கின்ற அதிகாரங்கள் அனைததும் தனியொருவரிடம் கொடுத்துவிட்டுஇருக்கின்ற நிலையுள்ளது.

சென்றவருடம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் நிறைவாக இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்து. நிறைவேற்று அதிகாரம் இல்லாமல் ஆக்கப்படுவது இருந்தது.

2001ஆம் ஆண்டு 17வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்ட போது நிறைவேற்று அதிகாரமுறையில் இருக்கின்ற சில குறைபாடுகளை ஓரளவுக்காகவது நிவர்த்திசெய்யவேண்டும் என்பதற்காக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன. அத்துடன் ஓரு அரசியலமைப்பு சபையும் உருவாக்கப்பட்டு ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அரசியலமைப்பு சபையின் அனுமதியுடன் நியமிக்கவேண்டும் என்ற ஏற்பாடும் இருந்தது.

நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் அவற்றினை செய்யவில்லை. அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமலே மகிந்த ஆட்சிக்காலத்தில் அது நிறைவுக்குவந்தது. 2010ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு இருந்த அதிகாரம் எனக்கும் வேண்டும் என்றுதான் 18வது அரசியலமைப்பு திருத்ததினை கொண்டுவந்தார்.

இந்த திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தையும் இல்லாமல்செய்தது.

18வது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை கடுமையாக எதிர்த்தது. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பலர் நீக்கப்பட்டனர்.  ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தினை விட்டு வெளியேறிச்சென்றுவிட்டு எங்களில் யாரும் மாறவில்லையென்பதை ஆணித்தரமாக கூறிவிட்டு அமர்ந்தபோது அரியம் எம்.பிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பியசேன எழுந்து மறுபுறம் சென்றார். அதற்கு எதிராக நாங்கள் முழுமையாக செயற்பட்டோம்.

அதிகாரங்கள் பகிரப்படுவது என்பது மாகாணங்களுக்கு பகிரப்படுதல் மட்டுமல்ல அது ஒரு சமநிலை பேணப்படவேண்டும்,ஒருவரின் கைகளில் அதிக அதிகாரங்கள் இருக்ககூடாது. 2010ஆம் ஆண்டு 18வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதம நீதியரசரை பதவி நீக்க தனது அதிகாரத்தினை மகிந்த ராஜபக்ச காண்பித்தார். தனது அதிகாரங்களை பிரயோகித்து காண்பிப்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

இதன் காரணமாக இந்த நிலைமை மாற்றப்படவேண்டும் என்ற கருத்து பெரும்பான்மை மக்களிடம் இருந்து எழுந்தது. அதன்காரணமாக 2012ஆம்ஆண்டு சோபித தேரர் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினை நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிப்பது என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு வேறு பல விடயங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டு தமிழ் மக்களுக்கான தீர்வு அதிகாரப்பகிர்வு மூலம் செய்யப்பட வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுத்தான் 2014ஆம் ஆண்டு மாற்று அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டு மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக கொண்டுவரப்பட்டு மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார்.

மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிப்பேன் என்ற வாக்குறுதியை வழங்கினார். அதனடிப்படையில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதுடம் அரசியலமைப்பு சீர்திருத்தம் இரண்டு பகுதிகளாக செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பு தேவையான பகுதிகள் பொதுத்தேர்தலுக்கு பின்னர் செய்யப்படும், சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லாமல் ஜனாதிபதி அதிகார குறைப்பு விடயங்கள் அரசியலமைப்பு திருத்தம் மூலம் முன்னதாக செய்யப்படும் என்று கூறப்பட்டது.

அதன் காரணமாகவே 19வது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இவற்றில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படவில்லை.தமிழ் தேசிய அதிகாரப்பகிர்வு பேசப்படவில்லை,ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் பல சரத்துகள் காணப்பட்டது.நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கூட்டப்பட்டது.

மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்களில் ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டது. அதற்கு அனைவரும் ஆதரவு வழங்கினர். அந்த விடயங்கள் வடக்கு கிழக்கினை தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் கேட்டுக்கொண்ட விடயங்கள். அவர்கள் ஏழு பேரும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முதலமைச்சர்கள்,ஐக்கிய தேசிய கட்சியின் அல்ல.

ஐக்கிய சுதந்திர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல இந்த அதிகார பகிர்வு முறைக்கு இணங்கினார்கள். அதனடிப்படையிலேயே இரண்டாவது இடைக்கால அறிக்கையுடன் வரைவு ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் நிறைவேற்று அதிகாரமுறையினை ஒழித்தல்,நாடாளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றல் என்பவற்றில் முரண்பாடுகள் தோற்றம்பெற்றன.ஆரம்பத்தில் அவற்றினை செய்வேண் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி கொடுத்திருந்தாலும் நிறைவேறும் தறுவாயில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதில் பின்னடைய தொடங்கியது. அதில் ஆர்வம் காட்டவில்லை.பின்னர் அதனை எதிர்க்க தொடங்கினார்கள்.நாட்டில் ஓரு வித்தியாசமான சூழ்நிலையினை உருவாக்கினார்கள்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்ற உடனேயே நாட்டில் பலமான ஜனாதிபதி தேவையென்கின்ற எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்தது. அதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் 25வருடகால சரித்திரத்தினையும் தாண்டி வெற்றிபெற்றார். தற்போது மூன்றில் பெரும்பான்மை கிடைததன் காரணமாக ஆணை தங்களுக்கு கிடைத்ததாக கூறியே 20வது திருத்ததினை கொண்டுவந்துள்ளார்கள். நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையென்பதை சொல்கின்றார்கள். 20வது திருத்தினை கொண்டுவந்து 19வது திருத்ததினை நீக்குவேன் என்று கூறும் ஜனாதிபதி புதிய அரசியலமைப்பினை உருவாக்குவேன் என்றும் கூறுகின்றார்.

IMG 1678 20வது திருத்தத்திற்கு எதிராக அனைவரும் வாக்களிக்க வேண்டும் -எம்.கே.சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுமானால் இந்த 20வது அரசியலமைப்பினை அவசரமாக கொண்டுவருவதன் தேவையென்ன என்ற கேள்வியெழுகின்றது.20வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சே இருக்காது.நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்பதை மும்முரமாக சொல்கின்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புதான்.

எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கின்ற ஒரே காரணத்தினால் எங்களது தீர்மானங்கள் அரசாட்யில் தாக்கம் செலுத்தாமல் இருப்பதை மாற்றி அமைக்கவேண்டும், அதனால் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று கோருவது நாங்கள் மட்டும்தான். அதிகாரப்பகிர்வு தமிழ் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான அடிப்படை காரணியாகும். மத்தியில் இருக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் கூட்டப்படவேண்டும். நாடாளுமன்றத்தில் இருந்து அதிகாரங்களை ஜனாதிபதி மீண்டும் எடுத்துக்கொள்வது என்பது நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.19வது திருத்தம் மூலம் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு மீண்டும் கொடுப்பதே 20வது திருத்ததின் நோக்கமாகும். இது முழுக்க முழுக்க ஜனநாயக விரோத செயல்.

20வது திருத்ததிற்கு எதிராக நீதிமன்றம் சென்று ஓரளவு வெற்றிபெற்றுள்ளோம்.ஜனாதிபதியின் செயல் நீதிமன்றத்தினை சவாலுக்குட்படுத்தமுடியும் அந்த காப்பரன் அவருக்கு திரும்ப வழங்கமுடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெறப்படவேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும்.

விசேடமாக கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தொல்லியல் செயலணி என்பது முழுக்கமுழுக்க சட்ட விரோதமானது. அந்த நியமனங்கள் சட்ட விரோதமானது. தொல்லியல் திணைக்களம் நாட்டில் உள்ளது, அது தொடர்பான சட்டம் நாட்டில் உள்ளது.பணிப்பாளர் நாயகம் ஒருவர் இருக்கின்றார்.சட்டத்தினால் அவருக்குத்தான் அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.அதனை ஜனாதிபதி தன்னிச்சையாக ஓரு செயலணிக்கு வழங்கமுடியாது.இதுமுற்றுமுழுதான சட்டவிரோதமான செயல். அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்துவருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் காணிகளை கையாள்வதற்கு ஆளுனருக்கு எந்தவிதமான அதிகாரங்களும் கிடையாது. ஜனாதிபதி இன்று சொல்வது போலவே அவரின் அடிவருடிகளும் அதனை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.நான் வாயால் ஒன்றை சொன்னால் அதுதான் சுற்றுநிரூபம் என்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அதற்கு சட்டத்தினால் அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் தங்களிடம்தான் அதிகாரம் உள்ளது என்ற தோரணையில் இயங்குகின்றார்கள்,இயக்குகின்றார்கள். அவர்கள் சொல்வதுதான் சட்டமாகவும் நடைபெறுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.தனது கடமையினை சரியாக செய்ததன் காரணமாக அவர் பழிவாங்கப்பட்டிருக்கின்றார். அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவெல்லாம் பேசப்படும்போது நேரடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த அரசாங்கத்தினால் ஒரு அரச அதிகாரி அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தப் பட்டிருக்கின்றார். இதற்கான கண்டனத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன்.மிகவும் கடுமையாக இதனை கண்டிக்கின்றோம்.

நாட்டிலே ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதன் மூலமாகத்தான் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற மக்களின் சிலசில உரிமைகளும் பாதுகாக்கப்படும்.நாட்டில் ஜனநாயகம் சீரழிந்துபோகும்போது முதலாவதாக பாதிக்கப்படுவது சிறுபான்மை சமூகமாகும்.

சிங்கள மக்களின் ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்கு சுமந்திரன் நீதிமன்றம் செல்வதாக சிலர் எழுதுகின்றனர். நாட்டில் ஜனநாயகம் சீரழிந்துபோகும்போது முதலாவதாக பாதிக்கப்படுவது சிறுபான்மை சமூகமாகும்.அடிப்படையையாவது முதலில் நாங்கள் தக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

அதிகாரப்பகிர்வு என்கின்ற கோட்பாடை நாங்கள் முழுமையாக ஆதரிக்கின்றோம். அது மத்திக்கும் மாகாணத்திற்குமான அதிகாரப்பகிர்வு மட்டுமல்ல.

20வது திருத்த சட்டமூலம் எதிர்க்கப்படவேண்டும், நிறைவேற்றாமல் தடுக்கப்படவேண்டும் என்பது நாங்கள் கட்டாயமாக செய்யவேண்டிய விடயம். இன்று இந்த ஜனாதிபதியை கொண்டுவந்த பல சக்திகளும் திடீர் ஞானம் கிடைத்ததுபோன்று செயற்படுகின்றார்கள். 20வது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.