178 வருடங்கள் சேவையாற்றிய ‘தோமஸ் குக்’ நிறுவனம் செயலிழந்தது

423 Views

உலகின் மிகப் பழைமையான சுற்றுலா சேவை நிறுவனமான ‘தோமஸ் குக்’ இன் சேவையை தொடர மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சிகளும் தோற்றுப் போனதால் அதன் செயற்பாடுகள் முடங்கிப் போயுள்ளன.

பிரிட்டனின் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதியில் 1841ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ‘தோமஸ் குக்’ என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. 178 வருடங்கள் சேவையாற்றிய ‘தோமஸ் குக்’ நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் உடனடியாக முடிவிற்கு வருவதாக பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் ஊடாக சுற்றுலா சென்றுள்ள சுமார் ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்தின் ஊடாக வெளிநாடு சென்றுள்ள பிரிட்டனைச் சேர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் பேர் மீண்டும் நாடு திரும்புவதற்குரிய நடவடிக்கைள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

திட்டமிட்டபடி ‘தோமஸ் குக்’ நிறுவனத்தின் ஊடாக சுற்றுலா சென்றுள்ள 16,000 பயணிகள் 23ஆம் திகதி  பிரிட்டனுக்குத் திரும்ப வேண்டும். அவர்களது பயணத் திட்டத்தில் இந்த சேவை முடக்கம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஊடகத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

64 வழித் தடங்களில் சிக்குண்டுள்ள சுமார் 14,000 பயணிகளை மீட்பதற்கு 45 விமானங்களை இயக்குவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஈஸிஜெட் விர்ஜின் ஆகிய விமான சேவை நிறுவனங்களின் விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

thomas cook 178 வருடங்கள் சேவையாற்றிய ‘தோமஸ் குக்’ நிறுவனம் செயலிழந்ததுதற்போது நேர்ந்துள்ள அசாதாரணமான சூழ்நிலை ஆழ்ந்த வருத்தத்தைத் தருவதாக தோமஸ் குக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான பீற்றர் பாங்க்ஹௌஸர் தெரிவித்துள்ளார். தனது நிறுவனத்தின் இலட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிரபல சுற்றுலா சேவை நிறுவனத்தின் முடக்கத்தால் உலகம் முழுவதுமுள்ள 22,000 ஊழியர்களின் பணி குறித்து அச்சம் எழுந்துள்ளது.

இந்நிறுவனம் தங்களின் வீழ்ச்சியைத் தடுப்பதற்கு பிரிட்டன் அரசிடம் 250 மில்லியன் பவுண்டு நிதியை கேட்டதாகவும், அதற்கு அரசு மறுப்புத் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டனின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இந்நிறுவனத்திற்கு இந்த நிதி வழங்கப்பட்டிருந்தாலும்,  அதனால் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்குப் பிடித்திருக்க முடியும் என்றும், அதன் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே வந்திருக்கும் என்றும் தான் அச்சம் கொள்வதாகவும் அவர் கூறினார்.

மிகப் பெரியளவிலான கடன்களும் தவறான வணிக கொள்கைகளுமே ‘தோமஸ் குக்’ நிறுவனத்தின் முடக்கத்திற்கான காரணமாக உள்ளதாக கிராண்ட் தெரிவித்துள்ளார்.

‘தோமஸ் குக்’ நிறுவனத்தின் இந்திய, சீன,ஜேர்மனிய மற்றும் நோர்ட்டிக் துணை நிறுவனங்களின் வர்த்தகம் வழக்கம் போல தொடரும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள துணை நிறுவனங்களுக்கும் பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் அதன் தாய் நிறுவனத்திற்கும் சட்டரீதியாக நேரடித் தொடர்பு இல்லை என்பதால், அவற்றின் வர்த்தக செயற்பாடுகள் உடனடியாக பாதிக்கப்படவில்லை.

எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள ‘தோமஸ் குக்’ கின் துணை நிறுவனங்கள் தங்களின் விமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயற்பாடுகளுக்கு தாய் நிறுவனத்தையே சார்ந்துள்ளதால், அவற்றின் வர்த்தக நடவடிக்கை பாதிப்படையாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒருவேளை அந்த முயற்சி பலனளிக்காது போனால் கூடுதலாக மூன்று முதல் நான்கரை இலட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகக்கூடும்.

Leave a Reply